‘என்னிடம் 26 கார்கள் உள்ளதா? எம்.எல்.ஏ தலை சீவக் கூடாதா? குளிக்க கூடாதா?’
‘என்னிடம் 26 கார்கள் உள்ளதா? எம்.எல்.ஏ தலை சீவக் கூடாதா? குளிக்க கூடாதா?’ – கனிமொழி சந்தோஷ் ஆவேசம்
"சட்டமன்ற உறுப்பினர் என்றால் செருப்பு போடக்கூடாது, தலையை சீவக் கூடாது குளிக்க கூடாது, அப்படியே வரவேண்டும் என்று ஏதாவது உள்ளதா?"
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய கனிமொழி சந்தோஷ், “பல்வேறு செய்திகளில் என்னிடம் 26 கார்கள் உள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியாகிறது. மக்கள் வரிப்பணத்தை தூக்கி சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். நீங்கள் வந்து பார்த்தீர்களா? எந்த ஆதாரத்தை வைத்து அவ்வாறு பேசுகிறார்கள்?
சட்டமன்ற உறுப்பினர் என்றால் செருப்பு போடக்கூடாது, தலையை சீவக் கூடாது குளிக்க கூடாது, அப்படியே வரவேண்டும் என்று ஏதாவது உள்ளதா? சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்பவர்கள் தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசுங்கள் பார்க்கலாம்.
என்னை அழகான பொம்மை எனக் கூறுகிறார்கள். இந்த அழகான பொம்மை ஆபத்தான பொம்மையும் கூட என்றும் தூரமாக நின்று முகம் தெரியாமல் பேசிக் கொள்ளுங்கள் என் முகத்திற்கு முன்பு வந்தால் இந்த அழகான பொம்மை என்ன செய்யும் என்பது பிறகு தெரியும்.
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடம் பாக்கி விடாமல் தயவு செய்து ஜெயித்து விடுங்கள். நான் இந்த கட்சிக்கு புகுந்த வீட்டிற்கு வந்த மருமகள் போன்றவள். அப்படி இருக்கும்போது மாமியார் கொடைச்சல் எல்லாம் இருக்கும். எனக்கு இங்கு ஆண் மாமியார், ஆண் நாத்தனார் போன்றவர்கள் தான் இருக்கிறார்கள். எங்களுக்குள் சண்டை வரலாம், ஆனால் இதனை வெளி நபர் யாரும் எங்களுக்குள் வந்து விடக்கூடாது. நாங்கள் அடித்துக் கொள்வோம் என்று யாராவது உள்ளே வந்தால், ஒரே வெட்டு தான்... சேர்த்து போட்டு விடுவோம்” என்றார்.