F1 சிங்கப்பூர்: வான்வழிச் செயல்பாடுகளுக்குத் தடை
அக்டோபர் 8 முதல் 12 வரை நடைபெற உள்ள இரவு நேர எஃப்1 கார் பந்தயத்தின்போது சிங்கப்பூரின் சில பகுதிகளில் வான்வழிச் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அந்த நாள்களில் அப்பகுதிகளில் வானூர்தி அல்லது பட்டங்களைப் பறக்கவிட முடியாது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் கார் பந்தயத்தின்போது வான்வழி படப்பிடிப்பில் ஈடுபடும் ஹெலிகாப்டர்களின் பாதுகாப்பான இயக்கத்திற்காகவும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காலிகக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மெரினா பே சேண்ட்ஸ், கார்டன்ஸ் பை தி பே, காத்தோங், காலாங்கில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப் ஆகிய இடங்கள் அடங்கும். மேலும் லிட்டில் இந்தியா, ஆர்ச்சர்ட் ரோடு, சைனாடவுன், தஞ்சோங் பகார் ஆகிய பிரபலமான பகுதிகளும் அதில் அடங்கும்.
இந்தக் கட்டுப்பாடு, தரைமட்டத்திலிருந்து சராசரி கடல் மட்டத்திற்கு மேலே 4,000 அடி (கிட்டத்தட்ட 1.2 கி.மீ) உயரம் வரை பொருந்தும்.
குறிப்பிட்ட கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அல்லது அப்பகுதிக்குள்ளாக மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான வான்வழி நடவடிக்கைகளுக்கும் பின்வரும் நேரங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 பிற்பகல் 2 மணி முதல் அக்டோபர் 9 அதிகாலை 1 மணி வரை; அக்டோபர் 9 பிற்பகல் 3 மணி முதல் அக்டோபர் 10 அதிகாலை 3 மணி வரை; அக்டோபர் 10 பிற்பகல் 2 மணி முதல் அக்டோபர் 11 அதிகாலை 3 மணி வரை; அக்டோபர் 11 பிற்பகல் 2 மணி முதல் அக்டோபர் 12 அதிகாலை 3 மணி வரை.
பட்டம் விடுதல், கயிற்றால் பிணைக்கப்பட்ட பலூன்களை மேலே பறக்கவிடுதல் வானூர்திகள் போன்ற ஆளில்லா விமானங்களை இயக்குதல் ஆகியவை தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.