இல்லாத கதையை சொல்லி ஏமாற்றுகின்றனர்: ஸ்டாலின் கோபம்
சென்னை: 'தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி அமைக்க பார்த்ததாக, இல்லாத கதையை சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றுகின்றனர்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றதையொட்டி, ஸ்டாலின் வெளியிட்ட 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:
இடைத்தேர்தல் நடைபெறுவதில், ஒரு துளியாவது மக்கள் நலன் இருக்கிறதா? தங்களை வளர்த்து ஆளாக்கிய கட்சியை ஒழிப்பதற்காக செய்த துரோகம் தான், இந்த இடைத்தேர்தல். தொகுதி மக்களின் தன்மானத்தை ஆளுங்கட்சியிடம் விலைபேசி, குதிரை பேரத்துக்கு துணை போனவர்களுக்கு, வாக்காளர்கள் என்ன பதிலடி கொடுக்கப் போகிறீர்கள்?
ஆளும் கட்சியில் இருந்தால் தான், நல்லது செய்ய முடியுமென்றால், எல்லா ஆட்சியிலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ராஜிமானா செய்து ஓடியிருக்க வேண்டுமே? தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி அமைக்க பார்த்தது என, இல்லாத கதையை சொல்லி, ஏமாற்ற பார்க்கின்றனர்.
முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை யாராவது, 2,500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, ஆறு சிலிண்டர் குறித்து பேசி ஓட்டு கேட்கின்றனரா? இது மக்களுக்கு நல்லது செய்ய அமைந்த ஆட்சி இல்லை.
விலைவாசியை கட்டுப்படுத்த சொன்னால், ஜோதிடரின் அறிவுரையை கேட்டு, 1,200 கோடி ரூபாயில் தலைமை செயலகத்தை தான் முதல்வர் கட்டுவார். விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் போராடினால், லண்டன் சென்று 'கார் ரேஸ்' பார்ப்பார்.
கொத்து கொத்தாக கொலை நடந்தால், சிங்கப்பெண்கள் என 'ரீல்ஸ்' போடுவார். ஆட்சியை காப்பாற்ற, எந்த எம்.எல்.ஏ.,க்களை வாங்கலாம் என்பதில் மட்டும்தான், அவர்களின் கவனம் இருக்கிறது.
'ரீல்ஸ்' போட்டு பொய்யை உண்மையாக்கி, மக்களை ஏமாற்றம் இந்த அரசுக்கு மக்கள் ஏமாற்றம் தர வேண்டும். துரோகத்துக்கு பாடம் புகட்டுங்கள். அப்போது தான் இனி இதுபோன்ற அநியாயம் நடக்காது. இவ்வாறு, அவர் பேசி உள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:சி.எம்., சார், நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்; எனது நான்கு கேள்விகளுக்கு உங்களிடம் பதில் உண்டா?1. பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரை, எம்.எல்.ஏ.,வாக, மாவட்டச்செயலராக வைத்துக் கொண்டு, பெண் பாதுகாவலர் போல் வேடம் போடலாமா?2. அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பதில் இருந்து, தினமும் அறிவித்துவிட்டு 8 மணி நேரம் மின்வெட்டு என்பதை நோக்கி, தமிழகம் நகர உள்ளதாக வரும் செய்திகள், உங்கள் செவிகளை எட்டவில்லையா?3. 'அசையாத மரமொன்று விழுந்தது கீழே' என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியை தவிர்க்க, மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே. ஒரு தெருவுக்கு இவ்வளவு என ஓட்டுகள் விலை பேசப்படுவதாக, உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்கு பதில் என்ன?4. குதிரை வேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா. அல்லது, இனியும் 'டி.வி.கே., குதிரை பேரத்தின், அடுத்த சீசன் தொடருமா? துாயசக்தி என, தம்பட்டம் அடித்த உங்கள் 'ரீல்', நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.