📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 04, 2026 05:04 AM

இணைய மோசடி: தகவல்களைப் பகிரும் முன் கவனம் தேவை

இணைய மோசடி: தகவல்களைப் பகிரும் முன் கவனம் தேவை

இணைய மோசடிகள் பலவகைப்பட்டாலும் பொதுமக்கள் தனிப்பட்ட தகவல்களையோ பணத்தையோ கொடுக்கும் முன்னர் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். சந்தேகம் இருந்தால் காவல்துறையைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறினர்.

அவசரப்பட்டுத் தகவல்களைக் கொடுத்தால் அவற்றை மோசடிக்காரர்கள் சட்டவிரோதமான செயல்களுக்கு உடனே பயன்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்தனர்.

இணைய மோசடிகள் குறித்தும் அவற்றை எப்படித் தவிர்க்கலாம் என்பது பற்றியும் எஸ்பிஎச் அரங்கில் தமிழ் முரசு அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் அந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ‘சந்திப்போம் சிந்திப்போம்’ எனும் நடப்பு விவகாரத் தொடரின் அங்கமாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

சிங்கப்பூரில் இணையமோசடி நிலவரம் மேம்பட்டு வருகிறது. இவ்வாண்டின் முற்பாதியில் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்பட்ட இழப்பு $410.6 மில்லியன். சென்ற ஆண்டில் இழப்பு $500.2 மில்லியனாக இருந்தது.

நிலைமை மேம்பட்டுள்ளபோதும், குற்றச்செயல்களில் இணைய மோசடிகளே அதிக எண்ணிக்கையில் இருப்பதாகக் காவல்துறை கூறியுள்ளது.

சிங்கப்பூரில் நிலவும் பலவகையான இணைய மோசடிகளில் மின்வர்த்தக மோசடி முதலிடத்தில் இருக்கிறது.

இங்குச் செயற்கை நுண்ணறிவு மோசடி, நிதி மோசடி, தனிமனித அடையாள மோசடி, சமூக ஊடக மோசடி முதலியவையே தம்மைப் பொறுத்தவரை அதிக அளவில் இருப்பதாகக் கூறினார் ஐபிஎம் நிறுவனத்தின் இணையப் பாதுகாப்புத் துறையில் ஆசிய பசிஃபிக் வட்டாரத் தலைவர் கணே‌‌ஷ் நாராயணன்.

காளிதாஸ் சட்ட நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் கந்தன் ராகவேந்திராவைப் பொறுத்தவரை, தாம் சந்தித்த வழக்குகளில் பெரும்பாலானவை ஆள்மாறாட்ட மோசடி, வேலை மோசடி, பணமோசடி முதலியவற்றின் தொடர்பிலானவை என்று கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இணைய மோசடிக்கு நேரடியாக ஆளான உள்ளூர்க் கலைஞர் ஈஸ்வரி குணசேகர், அந்த நேரத்தில் தாம் எதிர்கொண்ட சவால்களையும் மனவுளைச்சலையும் அவற்றிலிருந்து மீண்டுவந்தது பற்றியும் காணொளியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இவற்றைப் பற்றியும் இன்னும் பல்வேறு இணைய மோசடிகள் குறித்தும் அவற்றிலிருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் பங்கேற்பாளர்கள் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

கலந்துரையாடலின் முழுமையான காணொளியை இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.