இன்று குடமுழுக்கு கோலாகலமாக நடக்க உள்ள நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் முன் தமிழ் ஓதுவார்கள் ஆர்ப்பாட்டம்: புனிதநீர் ஊற்ற அனுமதியி
இன்று குடமுழுக்கு கோலாகலமாக நடக்க உள்ள நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் முன் தமிழ் ஓதுவார்கள் ஆர்ப்பாட்டம்: புனிதநீர் ஊற்ற அனுமதியில்லாததால் அதிருப்தி
மதுரை,: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதனால், மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டு கோலாகலமாக உள்ளது. குடமுழுக்கையோட்டி, இதற்காக கடந்த 6ம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி 10ம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 11ம் தேதி மாலையில் இருந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் காலையில் 8ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 9ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 414 பரிவார தெய்வங்களுக்கான குடமுழுக்கு நேற்று காலையில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு 10ம் கால யாக சாலை பூஜை தொடங்கியது. பல்வேறு வேள்வி பூஜைகளுக்கு பின் காலை 5 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கான யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள கும்ப கலசங்களுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாடு, யானைகள், ஒட்டகம் ஆகியவற்றுடன் மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி அனைத்து பரிவார சுவாமி சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்பட்டன.
தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. குறிப்பாக தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லட்சுமி, பத்ரகாளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு நேற்று குடமுழுக்கு நடந்தது. நேற்று மாலையில் 11ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், தங்க விமானங்கள். ராஜகோபுரங்கள், சன்னதி கோபுரங்கள் உள்ளிட்ட கும்ப கலசங்களுக்கு இந்த பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து இன்று காலை 3.35 மணிக்கு மங்கள இசை, 4 மணி முதல் விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம், பன்னிரெண்டாம் கால யாக வேள்வி, தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு, 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் சமகால மஹா குடமுழுக்கு, 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு மஹா குடமுழுக்கும், 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமிக்கு மகா குடமுழுக்கில் புனித நீர் தெளிக்கப்பட்டு, மகா தீபாராதனை வழிபாடும், திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மூலவர் மஹாபிஷேகம், தீபாராதனை, 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மாசி வீதி திருவீதி உலா, ஆச்சாரிய எஜமான உற்சவம் நடைபெறுகிறது. இதோடு குடமுழுக்கு விழாவிற்காக நேற்று வந்த திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி விடைபெறும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. குடமுழுக்கையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கருவறைகளில் சுவாமி சன்னதிகளை நீராட்டும்போது தமிழில் மந்திரங்கள் ஓதி நீராட்டு செய்ய வேண்டும், கோயில் விமானங்களிலும் தமிழ் மந்திரங்கள் ஓதுபவர்கள் புனிதநீர் குடத்தை எடுத்துச் சென்று, தமிழில் மந்திரங்கள் ஓதி கோபுரங்களில் குடமுழுக்கு செய்ய வேண்டும். யாகசாலைகளில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதுபவர்களுக்கு நிகராக, தமிழில் மந்திரங்கள் ஓதுபவர்களையும் நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெய்வத்தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த சத்யபாமா, மூங்கிலடியார், குச்சனூர் கிழார், தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மணியரசன் உள்பட 20 பேர் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் முன்பு அமர்ந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவார்கள் எனக்கூறி எட்டு பேருடன் வந்து, ஆர்ப்பாட்டம் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதேபோல் அமைச்சர் நிர்மல்குமாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். தேவாரம், திருவாசகம் பாட மட்டுமே கோயில் ஓதுவார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புனிதநீர் ஊற்ற அனுமதியில்லை என்றனர். இது தமிழ் ஓதுவார்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
6500 பாஸ்களை தூக்கிச்சென்ற அமைச்சர்கள் நிர்மல்குமார்,ரமேஷ்
மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கை காண பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பல லட்சம் பேர் வந்துள்ளனர். இதனால், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த போலீசார் 6,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் மற்றும் முக்கிய விஐபிகள் தரிசனத்திற்கு 7 வண்ணங்களில் 11 ஆயிரம் பாஸ்கள் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டன. இதில், 2,000 பாஸ்கள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள பாஸ்களில் அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் 3000மும், எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார் 3,500 பாஸ்கள் பெற்றுச் சென்று விட்டனர். மீதமுள்ள 2,500 பாஸ்களை வைத்து உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் உள்ளிட்டோருக்கு கொடுக்க முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் பரிதவித்து வருகின்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து வர 50 பாஸ்கள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கோயில் ஊழியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
அரசியல் தலையீடு பாஸ்கள் பதுக்கலா..? அமைச்சர் விளக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆய்வு செய்து விட்டு அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் மேல் தளத்தில் எவ்வளவு பேரை அனுமதிப்பது என்பது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. 9 ஆயிரம் பேரை அனுமதிக்கும் திட்டம் உள்ளது. ஆனால், அவர்களை அனுமதிக்க முடியுமா என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் மேலே அனுமதிக்கப்படுவார்கள். சித்திரை வீதியில் மக்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இது கோபுரத்திற்கு செல்வோர் வந்து செல்வதற்கான வழி மட்டுமே. குடமுழுக்கு பணியில் அரசியல் இல்லை. மக்கள் பாதுகாப்பு சார்ந்து மட்டுமே பணியாற்றுகிறோம். அறங்காவலர்கள் குழுவை தொடர்பு கொண்டு அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய சொல்கிறேன். பாஸ் விஷயத்தில் நாங்கள் எந்த தலையீடும் செய்யவில்லை. பாஸை கண்ணில் கூட பார்க்கவில்லை’’ என்றார்.
அமைச்சர் ரமேஷ் கூறுகையில், ‘‘தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறை செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு’’ என்றார்.