📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 10, 2026 11:02 AM

இந்திய அணியில் இடம் கிடைத்தும் ஏமாந்த சர்ஃபராஸ் கான்.. பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்

இந்திய அணியில் இடம் கிடைத்தும் ஏமாந்த சர்ஃபராஸ் கான்.. பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்

இந்திய அணியில் இடம் கிடைத்தும் ஏமாந்த சர்ஃபராஸ் கான்.. பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்

கொழும்பு: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு, இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கானை சேர்த்துள்ளது. சாய் சுதர்சன் காயமடைந்து இருந்ததால் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் தான் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டார். தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சாய் சுதர்சனை 3 வது இடத்தில் களம் இறக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியதால், அந்த இடத்திற்கு தேவ்தத் படிக்கல் அல்லது கேப்டன் சுப்மன் கில் ஆகியோரில் ஒருவரை களம் இறக்க கம்பீர் திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல் 3 வது இடத்தில் விளையாடி சதம் விளாசினார். இதனால் காலேவில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் 3 வது இடத்தில் தேவ்தத் படிக்கல் விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக சர்ஃபராஸ் கான் 5 அல்லது 6 வது வரிசையிலேயே களம் இறங்குவார். சில நேரங்களில் 4 வது இடத்திலும் விளையாடியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை 4 வது வரிசையில் தான் அடித்தார். ஆனால் தற்போதைய இந்திய அணியின் வரிசைப்படி சர்ஃபராஸ் கானுக்கு இடம் கிடைப்பது கடினமே. கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்குவர். 3வது இடத்தில் தேவ்தத் படிக்கலுக்கே வாய்ப்பு அதிகம். 4 வது இடத்தில் சுப்மன் கில்லும், 5 வது இடத்தில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும் விளையாட உள்ளனர்.

இதனால் நடுவரிசையில் சர்ஃபராஸ் கானுக்கு இடம் கிடைப்பது கடினம். மேலும் ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா 6 வது இடத்திலும், அவருக்கு அடுத்து சரண்ஷ் ஜெயின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் விளையாட வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் ஆகியோர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் ஒரு வேகப் பந்துவீச்சாளரை நீக்கி விட்டு கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்படலாம்.

இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள சர்ஃபராஸ் கான், முதல் போட்டியில் பெஞ்சில் அமர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: கே எல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சரண்ஷ் ஜெயின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார்.