இந்தியாவின் பாஸ் அம்பானியா: எலான் மஸ்க் கேள்வி
வாஷிங்டன்: செயற்கைக்கோள் வாயிலாக இணையவழி சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அந்நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.
நேற்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், '' இந்தியாவில் தனது ஏகபோக ஆதிக்கத்தை தக்க வைக்க சில பணக்காரர்கள் ஸ்டார்லிங்க்கை முடக்குகின்றனர். அவர்கள் யார் என நீங்கள் யூகிக்கலாம். அது இந்திய மக்களுக்கு எதிரானது,'' என பதிவிட்டு இருந்தார்.
ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு'' இந்தியாவில் செயற்கைக்கோள் சேவைக்கான ஒழுங்குமுறை சட்டம் பாரபட்சமின்றியும், நியாயமான முறையிலும் நடைமுறையில் உள்ளது. எலான்மஸ்க்கின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது,'' எனத் தெரிவித்து இருந்தது.
இது இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. எலான் மஸ்க்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
அந்த பதிவு ஒன்றுக்கு எலான்மஸ்க் வெளியிட்ட பதில் ஒன்றில்,'' ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு 165 நாடுகள் லைசென்ஸ் வழங்கி உள்ளன. இந்திய அரசின் ஒவ்வொரு சட்டம் மற்றும் வழிமுறைகளை ஐந்து ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். ஆனால், இன்னும் லைசென்ஸ் வழங்கப்படாதது ஏன்? இந்தியாவின் உண்மையான பாஸ் அம்பானியா,'' என்று கூறியுள்ளார்.
அவரது பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் வெளியிட்ட பதிவு ஒன்றில் 'எலான் மஸ்க்கை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். மற்றொரு நபரை கண்டுபிடிக்கும் வரை காத்திருங்கள்,'' எனக்கூறியுள்ளார்.