இந்தோனீசிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிபர் உத்தரவு
ஜகார்த்தா: சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கடுமையான புகைமூட்டம் உருவாகக் காரணமாக இருக்கும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், அக்டோபர் 12ஆம் தேதி அவர் வழிநடத்திய கூட்டம் ஒன்றில் சிங்கப்பூரும் மலேசியாவும் உதவ முன்வந்தது குறித்து அவர் பேசவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் அதுபற்றி அவர் கலந்துரையாடவில்லை என்று அரசியல், தற்காப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் டுடுங் அப்டுராக்மன் கூறினார்.
தீயணைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி தேசியப் பேரிடர் தணிப்பு அமைப்பிற்குத் திரு பிரபோவோ உத்தரவிட்டதாக மட்டும் அவர் குறிப்பிட்டார். முக்கியமாக மத்திய கலிமந்தான், தென் சுமத்ரா ஆகியவற்றில் அதைத் தீவிரமாக மேற்கொள்ளும்படி திரு பிரபோவோ கூறியதைத் திரு டுடுங் பகிர்ந்துகொண்டார்.
இந்தோனீசியாவில் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தால் அண்டை நாடுகளில் விமானச் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டன. மேலும், பள்ளிகள் மூடப்பட்டதுடன் சுகாதாரப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.
தீயை மிகவும் துரிதமாகக் கட்டுக்குள் கொண்டுவருவதில் அதிபர் பிரபோவோ முழுக் கவனம் செலுத்துவதாகத் திரு டுடுங் பகிர்ந்துகொண்டார்.
இந்தோனீசியாவின் காட்டுத் தீயை தேசியப் பேரிடராகத் தற்போதைக்கு அறிவிக்கப்போவதில்லை என்ற அவர், “அதைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இருக்கிறோம்,” என்றார்.
இதற்கிடையே, தீயணைப்புப் பணிகளில் கைகொடுக்க விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றுடன் அதிகாரிகளையும் அனுப்ப மலேசியா முன்வந்துள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மலேசியாவில் இம்மாதம் 7ஆம் தேதி, புகைமூட்டத்திற்குக் காரணமாக இருந்தோர் குறித்து இன்னும் வெளிப்படையாக இருக்கும்படி கோரி ‘கிரீன்பீஸ்’ அமைப்பின் ஆர்வலர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர்.
சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, தீயணைப்புப் பணிகளில் உதவுவது குறித்து இம்மாதம் 10ஆம் தேதி, இந்தோனீசியச் சுற்றுப்புற அமைச்சர் ஜும்ஹர் ஹிடாயாட்டைத் தொடர்புகொண்டார்.
இதற்கிடையே, மனிலாவில் நடைபெறவிருக்கும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் எல்லைத் தாண்டிய புகைமூட்ட விவகாரத்தை முன்வைக்கப்போவதாக மலேசியா தெரிவித்துள்ளது.
பிரச்சினையைக் களைய வட்டார அளவில் இன்னும் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று அது குறிப்பிட்டது.
இயற்கைப் பேரிடர்களைக் கையாள்வதற்கான கட்டமைப்பை ஆசியான் கொண்டிருப்பதாகக் கூறிய மலேசியா, புகைமூட்டம் அதில் சேர்க்கப்படவில்லை என்றும் பேரிடராக வகைப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டியது.