இயக்குநர் சஞ்சய்க்காக எதையும் செய்யத் தயார்
இயக்குநர் சஞ்சய்க்காக எதையும் செய்யத் தயார் - நடிகர் சந்தீப் கிஷன் நெகிழ்ச்சி பேட்டி
வைரல் தொற்று காரணமாக இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு 'சிக்மா' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தயாரிப்பாளர் தமிழ்குமரன் தெரிவித்துள்ளார்.
Published : October 1, 2026 at 9:39 AM IST
சென்னை: இயக்குநர் சஞ்சய்யை நடிகராக பார்க்க வேண்டும் என்றும், அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் எனவும் நடிகர் சந்தீப் கிஷன் கூறியுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், லைகா மற்றும் ஜேஎஸ்கே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள சிக்மா திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வைரல் தொற்று காரணமாக இயக்குநர் ஜேசன் சஞ்சய் பங்கேற்கவில்லை என படத்தின் தயாரிப்பாளர் தமிழ்குமரன் தெரிவித்தார். இந்நிகழ்வில் நடிகர் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தமிழ் குமரன் மேடையில் பேசுகையில், “ஏற்கனவே படத்தின் ப்ரமோஷனை சென்னையில் நடத்த திட்டமிட்டு, அது தள்ளி போனது. தவிர்க்க முடியாத காரணத்தால், சிக்மா படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. பல ஊர்களுக்கு பட புரமோஷன் நிகழ்வுகளுக்கு சென்றதால், ஜேசன் சஞ்சய்க்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. படம் வெளிவந்த பிறகு ஜேசன் பத்திரிகையாளர்களை சந்திப்பார்.
சிக்மா திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ஜேசன் இந்த படத்தை சிறப்பாக எடுத்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் மிகச்சிறிய இடைவெளிக்கு பிறகு லைகா நிறுவனம் படம் தயாரித்துள்ளது. இனி இடைவெளி இல்லாமல் லைகா படம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும். சிக்மா படத்தின் மிக பெரிய தூணே ஜேசன் சஞ்சய் தான்” என தெரிவித்தார்.
தொடர்ந்து ஜேசன் சஞ்சய் பற்றி புகழ்ந்து பேசிய தமிழ் குமரன், “ஜேசன் சஞ்சய் மிகவும் அன்பான தம்பி. டிரைவர், உதவியாளர் என அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். ஜேசன் சஞ்சயை அவ்வாறு வளர்த்துள்ளனர். இந்த படம் துவங்கும் போது, அவரின் தந்தை கட்சி தொடங்கவில்லை. எவ்வளவு பெரிய குடும்பத்தில் வந்து இருந்தாலும், அவ்வளவு தன்மையாக உள்ளார்” என்றார்.
சிக்மா படத்திற்கு நடிகர் அஜித்குமார் என்ற கேள்விக்கு, ”அஜித்குமார் மேலாளர் சுரேஷ் சந்திராவை எங்களுடன் அனுப்பி வைத்துள்ளார். அவரும் எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்” என தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் சந்தீப் கிஷன் பேசுகையில், “எனது பயணத்தில் இந்த படம் முக்கியமானது. எனது வாழ்க்கையை சிறிய பிக்பாஸ் போன்று தான் பார்க்கிறேன்.
லைகா நிறுவனத்தின் மீது எனக்கு மரியாதை அதிகரித்துள்ளது. ஸ்பீக்கர் வெடிக்கும் அளவிற்கு தமன் இசை அமைப்பார், அது போல் தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். சஞ்சய் எனக்கு மிக விருப்பமான நபராக இருந்தார். 24 வயதில் ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டு படத்தை சொன்ன தேதிக்கு முன்னதாக முடித்து கொடுத்துள்ளார்.
இன்று தான் சஞ்சய் கொச்சியில் இருந்து சென்னை வந்தார். அவருக்கு வைரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த நிகழ்விற்கு வரவில்லை, படம் வெளிவந்த பிறகு அவர் உங்களை சந்திப்பார். இயக்குநர் சஞ்சய்யை நடிகராக பார்க்க வேண்டும் என ஆசை உள்ளது. முறையாக சினிமா கற்று வந்த சஞ்சய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவருக்கு நான் உதவியாளராக வேண்டுமானாலும் பணியாற்றுவேன்” என கூறினார்.