Jailer 2 Day 1 Box Office
சென்னை: ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் என்ற ஆரூடங்களும் எழுந்திருக்கும் சூழலில்; முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
ரஜினியும், நெல்சன் திலீப்குமாரும் முதன்முதலில் இணைந்த ஜெயிலர் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டடித்தது. இதனையடுத்து அதன் இரண்டாவது பாகத்தையும் உருவாக்கினார்கள். இதில் புதிதாக எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு ஆகியோரும் இதில் இருக்கிறார்கள்.
நேற்று ரிலீஸ்: அனிருத் இசையமைபில், சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. கூலி, வேட்டையன் ஆகிய படங்களின் சறுக்கலுக்கு பிறகு வரும் ரஜினி படம் என்பதாலும், நெல்சனுடன் இரண்டாவது முறை கூட்டணி வைத்திருப்பதாலும்; இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க நம்பிக்கையை வைத்து ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டிருந்தன என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அலப்பறை இருந்தது.
படம் எப்படி?: உற்சாகத்துடன் தியேட்டருக்கு சென்றாலும்; இன்னொரு பயமும் அவர்களை ஆட்டுவித்தது. அதாவது தமிழ் சினிமா வரலாற்றில் சிங்கம் படத்தின் இரண்டாவது பாகத்தை தவிர்த்து மற்ற எந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே அந்த லிஸ்ட்டில் ஜெயிலர் 2 சேர்ந்துவிடுமோ என்று பயந்தார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க நெல்சன் டச் படமாகவே உருவாக்கப்பட்டிருந்தது. முதல் பாதி முழுவதும் நமோ நாராயணா, யோகிபாபு, சுராஜ் ஆகியோரின் காமெடியும், இரண்டாவது பாதியில் ஆக்ஷன், எமோஷன் என பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக கொடுத்திருந்தார் இயக்குநர்.
ஒரு சூப்பர் ஸ்டார்தான்: அதேபோல் ரஜினிகாந்த் மிரட்டிவிட்டார். சண்டை காட்சிகளில் அவர் சண்டை போடாவிட்டாலும்; அவர் தனது டீமை வைத்து எதிரிகளை காலி செய்யும் விதம் எல்லாம் கூஸ் பம்ப்ஸாக அமைந்தன. உண்மையில் அவர் ஆராகாந்த் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரஜினிகாந்த் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறார். போதாக்குறைக்கு அனிருத்தின் இசையும் பக்காவாக பொருந்திப்போக; தியேட்டரே ஸ்தம்பித்து போனது.
உறுதி கொடுக்கும் ரசிகர்கள்: சொல்லப்போனால் முதல் பாகத்தைவிடவும் இரண்டாவாது பாகத்தை இன்னும் தரமாக நெல்சன் திலீப்குமார் கொடுத்துவிட்டார். இந்தப் படத்தின் வெற்றி மேற்கொண்டு அவரது மார்க்கெட்டை உச்சத்துக்கு அழைத்து செல்லும் என்று நம்பலாம். அதேபோல், தமிழ் சினிமாவின் கனவான ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் நிச்சயம் அள்ளும் என்று உறுதியாக நம்புகிறார்கள் ரசிகர்கள். அதற்கான கதவு முதல் நாளான நேற்றே திறந்துவிட்டது.
முதல் நாள் வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி முதல் நாளான நேற்று அந்தப் படம் இந்தியாவில் மட்டும் 70 கோடியே 25 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். தமிழில் 43 கோடியே 35 லட்சம் ரூபாயும், தெலுங்கில் 12 கோடியே 50 லட்சம் ரூபாயையும், ஹிந்தியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாயும், கன்னடத்தில் 35 லட்சமும் என இந்தியாவில் வசூல் வேட்டையை நிகழ்த்தியிருக்கிறதாம். வெளிநாடுகளில் 55 கோடி ரூபாயையும் அள்ளியிருக்கிறதாம். மொத்தம் உலக அளவில் அப்படம் முதல் நாளில் 125 கோடியே 25 லட்சம் ரூபாயை வசூல் செய்திருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது.