ஜேசன் சஞ்சய்யை நல்லா வளர்த்துருக்காங்க.. விஜய், சங்கீதாவுக்கு சான்றிதழ் கொடுத்த டிடி!
சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்மா திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜேசன் சஞ்சய் குறித்து சூரியிடம் பிரபல தொகுப்பாளினி டிடி பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அரசியலுக்கு வந்துவிட்டதால் சினிமாவிலிருந்து விஜய் ஒதுங்கியிருக்கிறார். அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதனை போக்கும் விதமாக அமைந்தது ஜேசன் சஞ்சய்யின் வருகை. ஆனால் அவர் இயக்குநராக அறிவிப்பு வந்ததிலிருந்து விஜய்யிடமிருந்து ஒரு வாழ்த்தோ, அவரை நேரில் சந்திக்கவோ இல்லை. இதனால் இரண்டு பேருக்குமிடையே மோதலோ என்று நொந்துகொண்டார்கள் விஜய்யின் ரசிகர்கள்.
தெளிவுப்படுத்திய ஜேசன்: முதலில் ஜேசனும் படத்தின் அப்டேட்டில் இனிஷியலை தவிர்த்தார். எனவே அவர்கள் இரண்டு பேருக்கும் மோதல்தான்; இந்த வாய்ப்பையே சங்கீதாதான் வாங்கிக்கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலைமையில்தான் படத்தின் வேலையை முடித்துக்கொண்டு ப்ரோமோஷன்களில் இறங்கினார் ஜேசன். அப்போது தனது தந்தைக்கும், தனக்கும் இடையே எந்தவிதமான மோதலும் இல்லை என்பதை அவர் பேட்டிகளின் மூலம் தெளிவுப்படுத்தினார்.
அட்வைஸ் செய்த விஜய்: சஞ்சய்க்கு விஜய் எதுவுமே செய்யவில்லை என்ற கருத்தையும் அவர் தனது பேச்சால் உடைத்தெறிந்தார். 'உனக்கு என்ன வேண்டுமோ அதை நீயே முடிவு செய்துவிட்டு என்னிடம் வந்து கேள். நானாக எதுவும் வந்து உனக்கு ஊட்ட மாட்டேன்' என்பதுதான் விஜய்யின் அட்வைஸாக இருந்திருக்கிறது. அதேபோல் விஜய் முதலமைச்சரானது தனக்கும், தன்னுடைய குடும்பத்துக்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
நிம்மதியடைந்த ரசிகர்கள்: ஜேசனின் அந்தப் பக்குவமான பேட்டிகளை பார்த்து விஜய் ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள். மேலும் அவர் கொடுத்த பேட்டியில் பேசிய விதம், பொது இடங்களில் நடந்துகொண்ட விதம் எல்லாம் அவ்வளவு பக்குவமாகவும், எளிமையாகவும் இருந்தது. அப்படியே வின்டேஜ் விஜய்யை பார்ப்பது மாதிரி இருப்பதாக கொண்டாடுகிறார்கள். நாளை ரிலீஸாகவிருக்கும் படத்தை ஹிட்டாக்கிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள் அவர்கள்.
சான்றிதழ் கொடுத்த டிடி: இந்நிலையில் ஏழு கடல் ஏழு மலை ப்ரோமோஷனுக்காக சூரியை பேட்டியெடுத்தார் பிரபல தொகுப்பாளினி டிடி. அப்போது சஞ்சய் குறித்து சூரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூரி, "என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். இந்தப் படம் பெரிய வெற்றி படமாக அமைய வாழ்த்துகள்" என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட டிடி, "ஜேசன் ரொம்ப திறமையான பையன். அவருக்கு ரொம்ப நல்ல குணம். நல்ல தம்பி. அருமையாக வளர்த்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன வளர்த்தாலும் உள்ளே அவருக்குள் ஒன்று இருக்கும்தானே. அதை பார்க்கும்போது இந்தத் தம்பி நல்லா வரணும் என சொல்ல தோன்றுகிறது" என்றார்.