'ஜெம்' வீரமணியின் பாலியல் வன்முறை 'வீடியோ'க்கள் சிக்கின; அம்பலமாகி வரும் உண்மைகள்!
சென்னை: 'ஜெம்' கிரானைட்ஸ் தொழில் வர்த்தகர் வீரமணி,85, ஏழு மற்றும், 13 வயது சிறுமியரை, பாலியல் வன்முறை செய்யும், 'வீடியோ'க்களை கைப்பற்றிய போலீசார், அவரிடம், 23 ஆண்டுகள் உதவியாளராக இருந்த, கணேசன் என்பவரையும் கைது செய்தனர்.
'கிரானைட்ஸ்' தொழிலில் கோலோச்சிய, தொழில் வர்த்தகர், 'ஜெம்' வீரமணி, சிறுமியரை பாலியல் வன்முறை செய்த குற்றச்சாட்டில், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.சென்னை தேனாம்பேட்டையில், வீரமணி எடுத்துக் கொடுத்த வாடகை வீட்டில் தங்கி, சிறுமியரை மூளைச்சலவை செய்து, அவர்களுக்கு புத்தாடை, பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து, வீரமணியின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்து ஆட்டம் போட்ட, சாந்தி,60, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன்,63, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, வீரமணியால், சிறுமியர் பாலியல் வன்முறைக்கு ஆளானது குறித்து, கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து, ஆதாரங்கள் இல்லை என விசாரணை கமுக்கமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்தும், சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
சமூகத்தில், தன் பெயர் சீரழிந்து விடும் என்பதால், வழக்கில் இருந்து தப்பிக்க, வீரமணி ஏராளமான தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.அவர், சென்னை ஈ.சி.ஆரில் உள்ள, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை விற்று, 70 கோடி ரூபாயை, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், தன்னை வழக்கில் இருந்து காப்பாற்றுவதாக கூறிய புரோக்கர்களுக்கு வாரி வழங்கி உள்ளார்.
மேலும், தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் வாயிலாக, தன்னை கைது செய்யக்கூடாது என, போலீஸ் அதிகாரிகளுக்கு அழுத்தமும் கொடுத்துள்ளார். இது குறித்து, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த பண விவகாரத்தில், தெற்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கண்ணையாவின் மகன் பிரகாஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, பிரகாஷுக்கு, சென்னை போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர். ஆனால், அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீரமணி தொடர்பான, 'போக்சோ' வழக்கை விசாரித்து வரும் போலீசாருக்கு, அவரிடம், 23 ஆண்டுகள் உதவியாளராக இருந்த கணேசன் என்பவரிடம், சர்ச்சைக்குரிய, 'வீடியோ'க்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தற்போது, 'பாலாஜி குளோபல் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தில் பணிபுரியும், கணேசனை பிடித்து விசாரித்தனர்.
அவரது மொபைல் போனை வாங்கி பார்த்தபோது, அதில், வீரமணி, ஏழு மற்றும், 13 வயது சிறுமியரை, பாலியல் வன்முறை செய்தது தொடர்பான, 'வீடியோ'க்கள் இருப்பது தெரிய வந்தது.அவர், 23 ஆண்டுகள், 'ஜெம்' நிறுவனத்தில் பணிபுரிந்து, வீரமணியின் நிழல் போல இருந்துள்ளார். இவருக்கு அந்த, 'வீடியோ'க்கள் எப்படி கிடைத்தன, யார் அனுப்பியது என்ற தகவலை தெரிவிக்க மறுத்துள்ளார்.
இதனால், சிறுமியரை வீரமணி பாலியல் வன்முறை செய்த, 'வீடியோ'க்கள் தன்னிடம் இருந்தும், அதை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் தெரிவிக்காமல் இருந்த குற்றத்திற்காக, கணேசன் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் வீடியோக்கள் வந்ததன் பின்னணி குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக பா.ஐ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி; 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவன உரிமையாளர் வீரமணி, பல பெண் குழந்தைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, பா.ஜ., தவிர, வேறு எந்தக் கட்சியும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் அமைதி காப்பது தவறானது. இவ்வழக்கு குறித்து வரும் செய்திகள் அனைத்தும், காவல் துறையினரால் கசிய விடப்படும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள். காவல் துறையினர் இடையே பிளவு இருக்கிறது. இந்த வழக்கில் நேர்மையான, நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று, தமிழக அரசு நினைத்தால், வழக்கை உடனே சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.