📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 25, 2026 11:03 AM

ஜென் Z கிரிக்கெட் வீரர்கள் போராட்டம்.. “உத்தர பிரதேச மாநிலத்தை மூன்றாக பிரித்து 3 அணிகள் ஆக்கணும்”

ஜென் Z கிரிக்கெட் வீரர்கள் போராட்டம்.. “உத்தர பிரதேச மாநிலத்தை மூன்றாக பிரித்து 3 அணிகள் ஆக்கணும்”

ஜென் Z கிரிக்கெட் வீரர்கள் போராட்டம்.. “உத்தர பிரதேச மாநிலத்தை மூன்றாக பிரித்து 3 அணிகள் ஆக்கணும்”

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்திற்கு ஒரு ரஞ்சி கிரிக்கெட் அணி போதாது என்றும், மூன்று அணிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரி சுமார் 250 இளம் 'ஜென் இசட்' (Gen Z) கிரிக்கெட் வீரர்களும், அவர்களது பெற்றோர்களும் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மற்றும் பூர்வாஞ்சல் கிரிக்கெட் சங்கம் ஆகியவை இணைந்து ஏகானா மைதானத்தில் இந்தப் போராட்டத்தை நடத்தின. பூர்வாஞ்சல் மற்றும் மத்திய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். மாநிலத்தின் பரப்பளவும் மக்கள் தொகையும் மிக அதிகமாக இருப்பதால், ஒரே ஒரு ரஞ்சி அணி மட்டுமே இருப்பது திறமையான இளம் வீரர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்துப் பேசிய உத்தர பிரதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் சிங், "உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ரஞ்சி அணிகள் தேவை என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் முன்பு ஆதரவாகப் பேசியுள்ளார். 25 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்திற்கு மூன்று கிரிக்கெட் சங்கங்களும், அதன் மூலம் மூன்று ரஞ்சி அணிகளும் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நூற்றுக்கணக்கான இளம் வீரர்களுக்கு முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறினார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் உத்தர பிரதேச டி20 லீக் தொடரிலும் பூர்வாஞ்சல் மற்றும் மத்திய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இத்தொடரில் பங்கேற்கும் 6 அணிகளில் உள்ள 150 வீரர்களில் வெறும் 16 பேர் மட்டுமே இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால், மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 89 வீரர்களும், டெல்லியைச் சேர்ந்த 8 வீரர்களும் விளையாடி வருகின்றனர். இந்த பாரபட்சமான அணுகுமுறையை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதை சுட்டிக்காட்டி தங்களது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வீரர்கள் திட்டமிட்டுள்ளனர். 2026 செப்டம்பர் மாதத்தில் மாநிலம் தழுவிய அளவில் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாகவும், இதில் அதிக அளவிலான இளம் வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான வீரர்கள் போட்டியிடும் சூழலில், குறிப்பிட்ட சில வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கிறது. இதனால் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகப் பெற்றோர்களும் கவலை தெரிவித்தனர். உத்தர பிரதேச மாநிலத்தைப் பிரித்து மூன்று ரஞ்சி அணிகளை உருவாக்குவது மட்டுமே தங்களது கனவு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.