ஜிஹெச் வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
ஜிஹெச் வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
*நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி சுகாதாரகேடு நிலவுவதால் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் 10 அறுவை சிகிச்சை அரங்குகள் முக்கிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பிரிவுகளுடன் இயங்கி வருகிறது.
மாவட்ட தலைமையிட அரசு மருத்துவமனை என்பதால் ராமநாதபுரம் நகராட்சி, சுற்று வட்டார கிராமமக்கள், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்கள், சுற்றுலா மற்றும் பல்வேறு காரணமாக வரும் வெளிமாவட்டத்தினர் என நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரியில் மருத்துவம் மற்றும் நர்சிங் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை போன்று மதுரை எய்ம்ஸ் கல்லுாரி மாணவர்களும் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நகரில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் நகராட்சி பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால் மருத்துவமனை வளாகம் மற்றும் வெளிப்புறம் உள்ள நுழைவாயில் பகுதி மதுரை சாலையோரத்தில் மழைநீர் தேங்கி கழிவுநீராக காட்சியளிக்கிறது. மேலும் வழக்கமாக பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் வளாகத்திற்கு காத்திருக்கும் நிலை உள்ளது. இதை போன்று மருத்துவமனை வெளிப்பகுதியில் உள்ள சாலையோரங்கள் மற்றும் பயணியர் நிழற்குடை பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது.
இந்நிலையில் சுகாதாரமற்று தேங்கி கிடக்கும் மழைநீரால் பகலில் கடிக்கும் கொசுக்கடி மற்றும் துர்நாற்றத்தால் அவதிப்படும் நிலை உள்ளது. டெங்கு, மலேரியா மற்றும் மழைக்கால தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இதனை போன்று நகராட்சி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீர் முக்கிய பஜார், தெருக்கள், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியும், பள்ளமான இடங்களில் தேங்கியும் சுகாதாரகேட்டை ஏற்படுத்தி வருகிறது.
எனவே மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் நகராட்சி பகுதியில் மழைக்கால நடவடிக்கைகளை துரிதப்படுத்தி. தேங்கும் மழைநீரை வெளியேற்றி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.