📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 10, 2026 03:04 PM

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு; உச்சநீதிமன்றத்தில் 13ம் தேதி விசாரணை

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு; உச்சநீதிமன்றத்தில் 13ம் தேதி விசாரணை

புதுடில்லி: காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க உத்தரவிட கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்திற்கு ஜூலை 29ம் தேதியில் இருந்து, 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த கர்நாடகா மறுத்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனடியாக திறந்து விடுமாறு, கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில்; நடப்பு நீராண்டில் போதுமான நீர்வரத்து இருந்த போதிலும், நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும், கர்நாடக அரசு மதிக்க தவறி விட்டது. ஏதேதோ காரணங்களைக் கூறி, முழுமையாக நீரை திறக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து, ஆகஸ்ட் 12க்குள், வினாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட்டு, அது பிலிகுண்டுலு எல்லையை வந்தடைவதை கர்நாடக அரசு உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவை, ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நேரடியாக கண்காணிக்க வேண்டும். பிலிகுண்டுலுவில் நீர்வரத்து இருப்பதை உறுதி செய்ய, கர்நாடகாவிற்கு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அவசர மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.