📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 15, 2026 01:03 PM

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தான் கடைசி தீர்வு

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தான் கடைசி தீர்வு

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தான் கடைசி தீர்வு - முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

காவிரி நடுவர் மன்றம் சொன்னதையே கேட்காத கர்நாடக அரசு, நாம் சொல்வதையா கேட்கப் போகிறார்கள்? என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Published : August 14, 2026 at 4:00 PM IST

சென்னை: கர்நாடகா அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான உரிய நீரை பெற தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தி‌.மு.க. தரப்பில் கட்சியை மறுசீரமைப்பு செய்வது சம்பந்தமான குழுவை முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு‌.க‌. ஸ்டாலின் அறிவித்தார். இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு‌.க‌.ஸ்டாலின் முகாம் இல்லத்தில் நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், எஸ்.எஸ். சிவசங்கர், சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, ஆ. ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் முன்னாள் எம்‌.எல்‌.ஏ‌. பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட அளவிலான எல்லைகளை மறுவரையறை செய்தல், கட்சியின் பல்வேறு அணிகளை மறு கட்டமைப்பு செய்தல், தேர்தல் பணி குழுக்களை மாற்றி அமைப்பதுடன் நிரந்தர தேர்தல் மேலாண்மை அமைப்பை உருவாக்குதல், கட்சியின் செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் சிந்தனை மையம் அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக பரிசீலனை செய்யப்பட்டது.

மேலும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்றதையடுத்து, அடுத்த வாரம் தொகுதி வாரியாக மானிய கோரிக்கை நடைபெற உள்ளது. ஆகையால் மானிய கோரிக்கையின் பொழுது எதிர்க்கட்சி தரப்பில் முன்வைக்க வேண்டிய மக்கள் பிரச்சனைகள் மற்றும் காவிரி மேகதாது விவகாரம் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விவாதித்தார்.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி நடுவர் மன்றம் நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு நீரை வழங்காது, பிடிவாதமாகதான் இருப்பார்கள்.

கர்நாடகா அரசு, காவிரி நடுவர் மன்றம் சொன்னதையே கேட்கவில்லை என்றால், நாம் சொல்வதையா கேட்கப் போகிறார்கள்? தமிழ்நாட்டிற்கான உரிய நீரை பெற தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். வேறு வழி கிடையாது” எனத் தெரிவித்தார்.