காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் போராட்டம்
காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் போராட்டம் - முன்னெச்சரிக்கையாக ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி
கர்நாடக - தமிழ்நாடு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Published : August 10, 2026 at 7:28 AM IST
பெங்களூரு: மேகதாதுவில் அணைகட்ட மறுப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழக - கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம், காவிரியின் குறுக்கே அணை கட்டியே ஆகவேண்டுமென கர்நாடக அரசும், கன்னட அமைப்புகளும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், காவிரி நீரை தமிழகத்திற்கு திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தியும் கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் வரும் 13ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு கர்நாடக அரசு கேட்டுக்கொண்டது. இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென கன்னட கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னட விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை. எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தினார். மேலும் மேகதாதுவில் அணை கட்டியே ஆகவேண்டுமெனவும் கண்டிப்பாக தெரிவித்தார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 10ஆம் தேதியான இன்று காலை 11 மணிக்கு கர்நாடக - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக, இன்று தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கு செல்கிற அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்களை தடுத்து நிறுத்த இருப்பதாகவும், தமிழ்நாட்டு வாகனங்களை கர்நாடகவுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் இன்று தமிழ்நாடு பேருந்துகள் கர்நாடாகவுக்குள் நுழைய முடியுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஓசூர் பணிமனை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, காலை 9 மணியளவில் காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலை பொறுத்து, தமிழ்நாடு அரசு பேருந்துகளை கர்நாடகாவிற்குள் இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என ஈடிவி பாரத்திடம் தெரிவித்தனர்.
பயணிகள் கடும் அவதி
இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காலை 9:30 மணி முதல் ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மற்றும் கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரெனப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், வேலை நிமித்தமாகவும், அவசர தேவைகளுக்காகவும் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கு செல்ல ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, எல்லையில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகே பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அத்திப்பள்ளி வரை நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருவதால் அவற்றில் பயணிகள் முண்யடித்து செல்கின்றனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் ஆண்டுதோறும் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிற காவிரி நீரானது இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்கு 15 நாட்கள் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு இந்த ஆணைக்கு இணங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் தான், கேரளா, கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகள் நிரம்பின. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரானது தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது.