கேமராமேன் செய்த அந்த ஒரு ஜூம்.. ஆஸ்திரேலியாவின் தில்லுமுல்லு அம்பலமானது எப்படி? வெளியான உண்மை
கேமராமேன் செய்த அந்த ஒரு ஜூம்.. ஆஸ்திரேலியாவின் தில்லுமுல்லு அம்பலமானது எப்படி? வெளியான உண்மை
டர்பன்: 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரான் பான்கிராப்ட், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் உப்புத்தாள் மூலம் பந்து சேதப்படுத்துதல் (Ball Tampering) விவகாரத்தில் சிக்கியது திட்டமிட்டது அல்ல என்றும், அது முற்றிலும் எதிர்பாராமல் நடந்த தற்செயல் சம்பவம் என்றும் அப்போது அந்த டெஸ்ட் தொடரின் நேரலை ஒளிபரப்பு இயக்குநராக இருந்த ஆல்வின் நாய்க்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டர்பனில் வரும் அக்டோபர் 9 முதல் தொடங்குகிறது. 2018 பந்து சேதப்படுத்துதல் சர்ச்சைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால், பழைய விவகாரம் மீண்டும் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
அன்று கேமரான் பான்கிராஃப்ட் எப்படி பிடிபட்டார் என்பது குறித்துப் பேசிய நேரலை இயக்குநர் ஆல்வின் நாய்க்கர், "ஆஸ்திரேலிய வீரர்கள் சிக்கியது முற்றிலும் தற்செயலான ஒரு நிகழ்வு. அதுவரை யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. கேமரான் பான்கிராஃப்ட் வழக்கமாக பேண்ட்டில் பந்தைத் தேய்த்து பளபளப்பாக்குவார். ஆனால் ஒரு குறிப்பிட்ட பந்திற்குப் பிறகு உள்ளங்கையில் வைத்து பந்தைத் தேய்த்தார். இதனால் கேமராமேன் பான்கிராஃப்ட்டை மட்டும் தொடர்ந்து படம்பிடித்தார்.
பந்தை வீசிய பான்கிராஃப்ட் தனது கையை பாக்கெட்டுக்குள் விட்டார். உடனே கேமராமேன் பாக்கெட்டை நோக்கி காட்சியை ஜூம் செய்தார். பின்னர் அதனை மெதுவாக ரீப்ளே செய்து பார்த்தபோது, பாக்கெட்டிற்குள் இருந்த மஞ்சள் நிற உப்புத்தாள் தெளிவாகத் தெரிந்தது.
பொதுவாக ஓவர் முடிந்த பிறகே மைதானத்தின் பெரிய திரையில் காட்சிகள் மாறும். ஆனால் அதிர்ஷ்டவசமாக பந்துகளுக்கு இடைப்பட்ட நேரத்திலேயே அந்த வீடியோ மைதானத்தின் ராட்சத திரையில் ஒளிபரப்பானது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பான்கிராஃப்ட், பாக்கெட்டில் இருந்த காகிதத்தை எடுத்து தனது உள்ளாடையில் மறைத்தார். அந்த இரண்டாவது தவறையும் கேமரா மிகத் துல்லியமாக படம் பிடித்தது" என்று அவர் விவரித்தார்.
இந்த வீடியோ ஆதாரத்தால் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் சர்வதேச தடையைச் சந்தித்தனர். ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவியும் பறிபோனது குறிப்பிடத்தக்கது.