கிரிக்கெட் உலகையே மிரள வைத்த ஸ்மிருதி மந்தனா.. ஆசிய கோப்பையில் அதிரடி சதம்.. 4 ரெக்கார்டுகள்
கிரிக்கெட் உலகையே மிரள வைத்த ஸ்மிருதி மந்தனா.. ஆசிய கோப்பையில் அதிரடி சதம்.. 4 ரெக்கார்டுகள்
துபாய்: சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகளிர் ஆசிய கோப்பை தொடரின் குரூப் 'ஏ' பிரிவு லீக் ஆட்டம் நடந்தது. இதில் இந்தியா, ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதில் சர்வதேச டி20 அரங்கில் தனது 2வது சதத்தை இவர் பதிவு செய்தார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் மற்றும் தென் ஆப்ரிக்காவின் லாரா வோல்வார்ட் ஆகியோர் தலா 17 சதங்கள் அடித்து முதலிடத்தில் இருந்தனர். தற்போது அவர்களை பின்னுக்குத் தள்ளி மந்தனா உலக சாதனை படைத்துள்ளார்.
அதேபோல், இந்திய முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தன் வசம் வைத்திருந்த 10,868 ரன்கள் என்ற உலக சாதனையையும் மந்தனா தகர்த்தார். ஹாங்காங் அணிக்கு எதிராக 124 ரன்கள் எடுத்ததன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற மாபெரும் பெருமையை இவர் பெற்றார். மேலும், மகளிர் டி20 ஆசிய கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். உலக அளவில் இலங்கை கேப்டன் சமாரி அட்டபட்டுவுக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையை செய்த 2வது வீராங்கனை இவர் ஆவார்.
அத்துடன், ஆசிய கோப்பை டி20 வரலாற்றில் சமாரி அட்டபட்டு குவித்திருந்த 548 ரன்கள் சாதனையை 40 பந்துகளிலேயே முறியடித்து, ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாகவும் சாதனை செய்தார்.
ஏற்கனவே டி20 போட்டிகளில் 600 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து இந்திய அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்கிறார். மேலும், 300 சர்வதேச போட்டிகளில் ஆடிய இள வயது வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி மந்தனா கொண்டுள்ளார். தற்போது அடுத்தடுத்து உலக சாதனைகளை தகர்த்து இந்திய கிரிக்கெட்டுக்கு மந்தனா பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் ஹாங்காங் அணிக்கு இந்தியா 194 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. மந்தனா 124, ஷபாலி வர்மா 28 ரன்கள் சேர்த்தனர்.