களமிறங்கிய 30 மாஜிக்கள்...ON DUTYயில் 50 எம்எல்ஏக்கள்...ஸ்டாலின் மாஸ்டர் பிளான்!
களமிறங்கிய 30 மாஜிக்கள்...ON DUTYயில் 50 எம்எல்ஏக்கள்...ஸ்டாலின் மாஸ்டர் பிளான்!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பணிகளில் திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில், தவெக-வை எதிர்கொள்ள புதிய மாஸ்டர் பிளான் வகுத்து திமுக இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் பணிகள் ராக்கெட் வேகத்தில் சூடுபிடித்துள்ளன. அசுரபலத்துடன் இருக்கும் ஆளுங்கட்சியான த.வெ.க.வை எதிர்த்து, தங்கள் கட்சி மாஜிக்களின் கள அனுபவத்தையே முழுக்க முழுக்க நம்பி களமிறங்குகிறது தி.மு.க. இன்னொரு பக்கம், 'விஜய் முகம் இருக்க பயமேன்' என்கிற மனநிலையில் உற்சாகமாக தேர்தல் பணிகளைத் துவங்கியிருக்கிறது த.வெ.க.
இதற்கிடையே, கட்சிக்குள் நிலவும் ஓராயிரம் உள்ளடி வேலைகளையும் பலவீனமான கூட்டணியையும் தாண்டி, இரு தொகுதிகளிலும் இயல்பாக இருக்கும் தங்களது வாக்கு வங்கியை மட்டுமே நம்பி களம் காண்கிறது அ.தி.மு.க. இப்படியான சூழலில் தமிழக பிரதானக் கட்சிகளின் பலத்தை எடை போடவிருக்கும் இந்த இடைத்தேர்தல் குறித்த ஆரம்ப நிலை அப்டேட்ஸ் இதோ!
இதுகுறித்து, மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவர் நம்மிடம், "மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியான தவெகவும் சரி எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவும் சரி.. தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. தி.மு.க.வைப் பொறுத்தவரை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினைவிட அவரின் குடும்பத்தினர் இதில் தீவிரமாக உள்ளனர்.
திமுகவை பல வழிகளிலும் முதல்வர் விஜய் டார்கெட் செய்துவருவதால், வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஸ்டாலின்.
மாஜி அமைச்சர்களே பொறுப்பு!
மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து 30 மாஜி அமைச்சர்கள், 50 தி.மு.க. எம்.எல்.ஏக்களை களம் இறக்கியிருக்கிறது தலைமை. இதில் 12 முதல் 15 மாஜி அமைச்சர்கள் மற்றும் 20 திமுக எம்.எல்.ஏக்களை ஒரு தனி குழுவாகப் பிரித்து தாராபுரத்துக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறவர்களுக்கு லோக்கல் மாவட்டச் செயலாளரின் தேர்தல் வியூகத்துக்கு ஏற்ப பூத்துகள் பிரித்துக் கொடுக்கப்படும் லோக்கல் ஒன்றியச் செயலாளர்கள் சொல்வதற்கேற்ப இவர்கள் களப்பணியில் இறங்க வேண்டும்.
ஒரு பூத்தில் தி.மு.கவுக்கு ஆதரவாக 350 வாக்குகள் இருக்கின்றன என்றால், அதை சிந்தாமல் சிதறாமல் கொண்டுவந்து சேர்க்க வேண்டியது மாஜிக்களின் பொறுப்பு, ஒவ்வொரு மாஜிக்களும் குறைந்தது 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகள் வரை திமுக பக்கம் திருப்ப வேண்டும் என்பது தலைமையின் கட்டளை. இதற்கான செலவை மட்டும் இவர்கள் செலவு செய்தால் போதும் என சொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது.
மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் 27 கட்சிகளின் கூட்டணி பலத்துடன் தி.மு.க. களமிறங்கிய நிலையில் இத்தொகுதியில் 30 சதவிகித வாக்குகளை வாங்கி 3வது இடத்தைத்தான் பெற முடிந்தது. ஆனாலும்கூட அதைப்பற்றி திமுக தலைமை கவலைப்படவில்லை.
மொத்தம் உள்ள 2 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள மதுராந்தகம் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க. டார்கெட் வைத்திருக்கிறது. இதற்காக தா.மோ.அன்பரசன், சுந்தர் என இரண்டு மாவட்டச் செயலாளர்கள் மேற்பார்வையில் தேர்தல் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
தேர்தல் செலவில் கெடுபிடி!
மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமனுக்கான தேர்தல் செலவை கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க. அதிகார மையங்கள் களத்தில் இறக்கிய பணத்துக்கு இன்னமும் உரிய கணக்கு வராததால், இப்போது தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான ஒரு ஆடிட்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தேர்தல் செலவுக்கான பணம் வழங்கப்பட்டிருக்கிறது.
தாராபுரம் தொகுதியில் வேட்பாளர் சுகன்யா, லோக்கலில் ஓரளவுக்கு மக்களிடம் அறிமுகம் உள்ளவர். அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பணி கொங்கு மண்டல மாஜிக்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே மாஜி அமைச்சர்களில் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடமிருந்து பெரியளவில் நிதியை எதிர்பார்க்க வேண்டாம் என்ற குறிப்பை கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை வழங்கியிருக்கிறது. மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் களத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
அதேபோல் தென்சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான வேலுவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அவருக்கும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 11ம் தேதி இரு தொகுதிகளின் கட்சி நிர்வாகிகளை அறிவாலயத்தில் நேரடியாக சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அப்போது முழுவீச்சில் தேர்தல் பணியாற்றும்படியும். வேறு ஏதாவது குறுக்கீடுகள் இருந்தால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியிருக்கிறார். இதுதவிர இடைத்தேர்தலை முன்னிட்டு அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தலுக்கான திமுகவின் இந்த தீவிர வேலைப்பாடுகள் ஆளுங்கட்சியாக இருக்கக் கூடிய தவெகவிற்கு பாதிப்பு வருமா? இடைத்தேர்தலில் யார் வெற்றி வாகை சூடப்போகிறார்கள்? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
(தாரை இளமதி, கு.கணேஷ்குமார், அ.கண்ணதாசன்)