📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 29, 2026 07:04 PM

கோவை அருகே பயங்கரம்: முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி திமுக பிரமுகர் குத்திக்கொலை

கோவை அருகே பயங்கரம்: முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி திமுக பிரமுகர் குத்திக்கொலை

கோவை அருகே முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி திமுக பிரமுகரை அவரது நண்பர் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (62 வயது). பாக்குமட்டை வியாபாரியான இவர், திமுக பிரமுகர். அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (65 வயது). இவரும் திமுக பிரமுகர்தான். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

மிளகாய்ப்பொடி வீச்சு

இதனிடையே நாகராஜூக்கும், தனது மனைவிக்கும் இடையே தொடர்பு இருக்குமோ? என கந்தசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை நாகராஜ் டீ வாங்குவதற்காக பைக்கில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்றபோது, திடீரென அவரை கந்தசாமி வழிமறித்தார். நாகராஜ் பைக்கை நிறுத்துவதற்குள் அவரது முகத்தில் மிளகாய்ப்பொடியை எடுத்து வீசினார்.

சம்பவ இடத்திலேயே இறந்தார்

இதில் நிலைகுலைந்த நாகராஜ் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் கந்தசாமி தான் மறைத்து வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால் நாகராஜை சரமாரியாக குத்தினார். இதில் நாகராஜின் கழுத்து, தலையின் பின்பகுதி, வயிறு உள்பட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

தற்கொலை முயற்சி

இதையடுத்து கந்தசாமி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கந்தசாமியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் கந்தசாமி கத்தியால் தனது வலது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைக் கண்ட போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.