📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 22, 2026 02:03 PM

கோவில்களுக்கு சேர்த்த தங்கத்தால் ஆண்டுக்கு ரூ.20 கோடி கிடைக்கிறது : தி.மு.க., சேகர்பாபு தகவல்

கோவில்களுக்கு சேர்த்த தங்கத்தால் ஆண்டுக்கு ரூ.20 கோடி கிடைக்கிறது : தி.மு.க., சேகர்பாபு தகவல்

சென்னை: ''கோவில்களுக்கு சேர்த்த தங்கத்தால் ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, இறைவனுக்கு சொத்து சேர்த்து, அந்த சொத்தின் வாயிலாக இறைவனுக்கு திருப்பணி செய்தது தி.மு.க., அரசு தான்,'' என, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தி.மு.க., - சேகர்பாபு: கோவில்களில் ஆன்மிக வளர்ச்சிக்கு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கு, எப்படி எல்லாம் கடந்த காலங்களில் வருமானம் ஈட்டினோம் என்பதற்கு ஒரே ஓர் உதாரணம். மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த தங்கம் கேட்பாரற்று கிடந்தது.

எந்தெந்த தெய்வங்களுக்கு காணிக்கையாக வந்ததோ, அந்த தெய்வங்களுக்கு பயன்படுத்த முடியாத தங்கத்தை, நீதிபதிகளை வைத்து முழுதுமாக வீடியோ பதிவு செய்து, தங்கத்தை பிரித்து, பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக, மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள தங்க உருக்காலைக்கு அனுப்பினோம்.

அதன்படி, இதுவரை கோவில்களுக்கு சேர்த்த தங்கத்தின் அளவு, 1,111 கிலோ. இந்த தங்கத்தால் கிடைக்கும் ஆண்டு வருவாய், 20 கோடி ரூபாய்.

இப்படி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, இறைவனுக்கு சொத்து சேர்த்து, அந்த சொத்தின் வாயிலாக இறைவனுக்கு திருப்பணி செய்த ஓர் அரசு உண்டு என்றால், அது தி.மு.க., அரசு தான்.

இந்த ஆட்சியின் பட்ஜெட்டிலும், கொள்கை விளக்கக் குறிப்பிலும், 3,000 கோவில்களில் குடமுழுக்கு என்று கூறப்பட்டுள்ளது. 4,641 கோவில்களில், தேர்தல் அறிவிப்புக்கு முன் வரை குடமுழுக்கு நடத்தப்பட்டு விட்டது. ஆனால், நீங்கள், 281 கோவில்களுக்கு தான் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறீர்கள்.

எங்கள் ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில், 4,930 கோவில்களில் குடமுழுக்கு என்றால், நீங்கள் ஐந்து ஆண்டுகளில், 3,000 கோவில்களுக்கு தான் குடமுழுக்கு என்று அறிவித்துள்ளீர்கள்.

அமைச்சர் ரமேஷ்: கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டசபையில், 844 அறிவிப்புகளை, அமைச்சராக இருந்த சேகர்பாபு வெளியிட்டார். அதில், 79 அறிவிப்புகள், 418 கோடி ரூபாய் நிதி இல்லாமல் கிடப்பில் இருக்கின்றன. வெறும் அறிவிப்புகளுக்காக எண்ணிக்கையை கூட்டி விட்டு, ரத்து செய்யும் நிலைக்கு தள்ளிவிடாமல், என்ன செய்ய முடியுமோ, அதை தெளிவாக அறிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.