கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.. ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட சிராஜ்.. இந்திய அணி திரில் வெற்றி
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.. ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட சிராஜ்.. இந்திய அணி திரில் வெற்றி
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இறுதி ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி இந்திய அணிக்கு அபார வெற்றியை பெற்று தந்துள்ளார். இப்போட்டியில் அவர் மொத்தம் நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அசத்தினார்.
இப்போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாவது மற்றும் இறுதி நாளின் கடைசி ஓவர் தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது சிராஜ் மற்றும் ஆல் ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இது ஒரு பயிற்சிப் போட்டி என்பதால், முன்னணி பேட்ஸ்மேன்கள் சில பந்துகளை எதிர்கொண்ட பிறகு தாங்களாகவே ஓய்வு பெற்றனர். இலங்கை அணியின் ஆஃப் ஸ்பின்னர் நுவன்தா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை, சிராஜ் மிக நேர்த்தியாக டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸராக மாற்றினார். அதற்கு அடுத்த பந்து ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட, அதையும் சிராஜ் நேராக மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டார்.
அதற்கு அடுத்த பந்தையும் சிராஜ் நேராக சிக்ஸருக்கு விளாசி ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.இதற்கு முந்தைய ஓவரில் தினுஷாவின் பந்துவீச்சிலும் சிராஜ் தனது முதலாவது சிக்ஸரை அடித்திருந்தார். சிராஜ் அடுத்தடுத்து அடித்த சிக்ஸர்களால் இந்திய அணி அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றிருந்தாலும், பயிற்சிப் போட்டி என்பதால் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில், 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த முகமது சிராஜ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.இதன் மூலம் இந்திய அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றது.
முன்னதாக காயம் காரணமாக முதல் இன்னிங்சில் விளையாடாமல் இருந்த சுப்மன் கில், 2வது இன்னிங்சில் 54 பந்துகளை எதிர்கொண்டு 44 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதே போன்று மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான நிலையில், 2வது இன்னிங்சில் அதிரடியை காட்டினார். 46 பந்துகளை எதிர்கொண்டு 61 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். இதே போன்று முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் வெளியேறிய ரிஷப் பண்ட் 2வது இன்னிங்சில் 28 ரன்கள் சேர்த்தார்.