📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 08, 2026 09:01 PM

கடலை குறிவைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..துணைபோகும் மத்திய அரசு...கொதிப்பில் கடலோர மக்கள்!

கடலை குறிவைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..துணைபோகும் மத்திய அரசு...கொதிப்பில் கடலோர மக்கள்!

கடலை குறிவைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..துணைபோகும் மத்திய அரசு...கொதிப்பில் கடலோர மக்கள்!

பூம்புகார் அருகே கடல் பகுதியில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாக எழுந்துள்ள தகவல், காவிரி டெல்டா விவசாயம் மற்றும் கடல் வளத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடலில் இருந்து 18 கி.மீ தூரத்தில் நான்கு ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகளை அமைக்க, 'இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்புளோரேஷன்' என்ற தனியார் நிறுவனம், தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு அப்பகுதி மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போராட்டங்களும் நடத்தினர்.

இந்த நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக பூம்புகார் அருகே கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனிடம் பேசினோம். 'மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வங்கக்கடல் பகுதியில் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 5 எண்ணைய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்டி எக்ஸ்புளோரேஷன் & புரொடக்ஷன் என்ற நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது.

காவிரிப்படுகையில் பூமிக்கடியிலிருக்கும் இந்த எண்ணெய், எரிவாயு வளம் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்ணை உறுத்திக்கொண்டே உள்ளது. அத்துடன் ஓ.என்.ஜி.சியும் எண்ணெய், எரிவாயு எடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. போதாததற்கு வேதாந்தா நிறுவனமும் உரிமம் பெற்று எண்ணெய் எடுக்க காத்திருக்கிறது.

தரைப்பகுதி மட்டுமல்லாது கடல் பகுதியிலும் எண்ணெய் எடுக்க வெவ்வேறு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமம் கொடுத்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் விவசாயம் அழியும். கடல் வளம் கெட்டு மீன் வளமும் அழியும் ஆனால் அதைப்பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை அழிவை சந்திக்கவிருக்கும் நாம்தான் போராடியாக வேண்டும்.

இது மாதிரியான திட்டங்களை தமிழக அரசுதான் உடனடியாக எதிர்க்க வேண்டும். ஆனால் இந்த புதிய அரசு அமைதியாக இருப்பதன் நோக்கம்தான் புரியவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் எங்களது வேண்டுகோளின்படி காவிரிப் படுகைக்கு வெளியே அரியலூர் மாவட்டத்தில் 10, கூலூரில் 5, ராமநாதபுரத்தில் 20 என எந்த ஹைட்ரோ கார்பன் கிணறுக்கும் அனுமதி தரப்படவில்லை. ஆனால், இந்த அரசு மவுனமாக இருப்பது நல்ல அறிகுறி கிடையாது.

அதேபோல் டெல்டா பகுதியில் உள்ள பழைய மூடப்பட்ட எண்ணைய் கிணறுகளை பராமரிப்பு செய்கிறோம்' என அவற்றை மீண்டும் செயல்படுத்தும் திட்டங்களையும் தொடங்கியுள்ளனர். பராமரிப்பிற்கு என்ன தேவையோ அதைத்தானே எடுத்து வர வேண்டும். ஆயிரக்கணக்கான குழாய்களை கிணற்றுக்குள் செலுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்போது பராமரிப்பை மீறிய செயல் நடக்கிறது என்றுதானே அர்த்தம்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் இதுபோல் மராமத்து என்ற பெயரில் இவர்கள் நடத்திய பித்தலாட்டத்தை தடுத்து நிறுத்தினோம் இப்படி தொடர்ந்து டெல்டா மக்களை சீண்டியபடி உள்ளனர். இதற்கு முடிவு கட்டும் விதமாக தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

'பூம்புகார் கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ், தினகரன், வேல்முருகன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பேசினோம். 'தொடர்ந்து காவிரி சமவெளி மற்றும் கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க அனுமதி கொடுப்பது கவலையளிப்பதாக உள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலை கெடுக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அவை முறியடிக்கப்பட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடல் பகுதியில் 1997ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைப்பட்டன.

பின்னர் இந்த ஹார்டி எக்ஸ் புளோரேஷன் & புரொக்டெக்ஷன் என்ற அமெரிக்க நிறுவனம் ஓ.என்.ஜிசியுடன் இணைந்து கிணறுகளை பராமரித்து வந்தது. 2011ம் ஆண்டில் கைவிடப்பட்ட இந்த கிணறுகளில் மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடங்கப்பட்டது. அந்த எண்ணெய் கிணறுகளை விரிவாக்கம் செய்யும் நோக்கத்துடன் கூடுதலாக 5 எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் மேற்படி அமெரிக்க நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது.

ஒரு வேளை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும்கூட, எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதற்கு தமிழக அரசு மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி கட்டாயமாகும். இந்த அனுமதியை தமிழக அரசு வழங்கக் கூடாது.

இதேபோல், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் விண்ணப்பித்தது. அதற்கு பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே அணுகுமுறையைதான் எதிர்காலத்தில் இந்தத் புமணி திட்டத்திற்கும் தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து கேட்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தை பலமுறை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.

இப்படி இருந்தா எப்படி சார்!

ஆர்.விவேக் ஆனந்தன்