கடற்படைப் பயிற்சியை நிறைவுசெய்த சிங்கப்பூர்
சிங்கப்பூர்க் கடற்படைக்கும் ஜப்பான் கடல்துறை தற்காப்புப் படைக்கும் இடையிலான ‘சிங்கபென்’ என்ற இருதரப்பு கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) அதுகுறித்து அறிக்கை வெளியிட்டது.
இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிவரை நடைபெற்ற அந்தக் கடற்படைப் பயிற்சி, ஜப்பானுக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் நடைபெற்றது.
இருதரப்பும் கடல்சார் வல்லுநர்களைப் பரிமாறிக்கொண்டதுடன் பல பாரம்பரியப் போர்முறை சார்ந்த பயிற்சிகளையும் மேற்கொண்டன.
துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சிகள், தகவல்தொடர்புப் பயிற்சிகள், போர்க்கப்பல் நகர்வுப் பயிற்சிகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூரையும் ஜப்பானையும் சேர்ந்த அதிகாரிகளும் பயிற்சிக்குத் திட்டமிட்டு கரைப் பகுதியில் கப்பல்களைப் பார்வையிட்டனர்.
முதல் படையின் தளபதி, கர்னல் கார்டின் சோங், மேற்பரப்புப் போர் ஸ்குவாட்ரன் தளபதி, கேப்டன்இவாடே யோஹே ஆகியோர் இம்மாதம் 27ஆம் தேதி யோகோசுகா கடற்படைத் தளத்தில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு இணைந்து தலைமை தாங்கினர்.
தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய கர்னல் சோங், “சிங்கப்பூர் கடற்படையும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையும் தொழில்முறை பரிமாற்றங்கள், பயிற்சிகள், கப்பல் பார்வையிடல் மூலம் ஏற்பட்ட நட்புறவைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த இருதரப்புப் பயிற்சி, நமது ஒத்துழைப்பையும் நட்பையும் வலுப்படுத்துவதற்குக் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்றார்.