கடவுள் விஷ்ணுவின் அவதாரம் பிரதமர் மோடி; பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே புகழாரம்
புதுடில்லி: அரசு பதவிகளில் 25 ஆண்டை நிறைவு செய்த பிரதமர் மோடியை பாராட்டும் வகையில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே கூறியிருப்பதாவது; சர்வதேச விவகாரங்களில் அண்டை நாடுகளுக்கு பிரதமர் மோடி எப்போதும் முன்னுரிமை அளிக்கிறார். ஆப்ரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக்க முக்கிய பங்காற்றியுள்ளார். இதன்மூலம், வளரும் நாடுகளின் குரலை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி பூடான் உள்பட பிற நாடுகளுக்கு பலனளிக்கும். அண்டை நாடுகளுக்குப் பெரிய சந்தையையும், முதலீட்டுத் தொழில்நுட்பத்தையும் வழங்குகிறது.
அரசு பதவிகளை வகிப்பதில் பிரதமர் மோடி 25 ஆண்டை நிறைவு செய்துள்ளார். 2014ல் முதல்முறையாக பிரதமராக பொறுப்பேற்ற போது, அவர் தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு பூடானை தேர்வு செய்தார். பிரதமர் மோடி எனக்கு அண்ணனை போன்றவர். அவரை கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கிறேன்.
பூடானின் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் போது இந்தியா செய்த உதவியால், பல திட்டங்களை எங்களின் அரசு செய்ய முடிந்தது. இதன் காரணமாகவே, நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது,13வது ஐந்தாண்டு திட்டத்திற்கான நிதியை இருமடங்களாக உயர்த்தி, ரூ.10,000 கோடியாக பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.
ரயில்வே, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் மூலம் இந்தியா பூடானுக்கு முழு ஆதரவளித்து வருகிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.