📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 11, 2026 10:03 PM

கும்மிடிப்பூண்டியில் தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்: மின்வாரிய அதிகாரிகள் மீது சரமாரி புகார்

கும்மிடிப்பூண்டியில் தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்: மின்வாரிய அதிகாரிகள் மீது சரமாரி புகார்

கும்மிடிப்பூண்டியில் தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்: மின்வாரிய அதிகாரிகள் மீது சரமாரி புகார்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 11 மணி முதல் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மின்வாரிய அதிகாரிகளை அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டபோது, அவர்கள் முறையான பதிலளிக்காமலும், மின்தடையை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கும்மிடிப்பூண்டி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக 4 மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியலின்போது, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக கடும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், மாணவர்கள், நோயாளிகள், முதியோர், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் தூக்கமின்றி தவிப்பதாகவும் பெண்கள் உள்பட அனைவரும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகள்மீது சரமாரி புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் போலீசார் விசாரித்தனர். இதில், சிறுபுழல்பேட்டையில் உள்ள 230 கிலோவாட் துணை மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து வருவதாகவும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணியளவில் கும்மிடிப்பூண்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.