📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 25, 2026 10:04 PM

கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திமுக.,வுக்கு 10 சீட் கூட கிடைத்திருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திமுக.,வுக்கு 10 சீட் கூட கிடைத்திருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

சென்னை: ''காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க., தயவால் தான், தி.மு.க.,வால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடிந்தது,'' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, தி.மு.க., குரல் கொடுப்பதாக, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் கூறுகிறார். தி.மு.க., தலைவருக்கு ஒரு கோரிக்கை. சென்னை அறிவாலயத்தில், அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை அமைக்க வேண்டும்.

அமைச்சர் விஸ்வநாதன்: முதல்வர் விஜய் தலைமையிலான அரசில், பள்ளிக்கல்வி, உயர் கல்வி அமைச்சர்கள் இருவரும் பட்டியலினத்தை சார்ந்தவர்கள். இது, மிகப்பெரிய கவுரவம். ஆனால், தி.மு.க., தான், இந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காக வித்திட்டது போல பேசுகின்றனர்.

தி.மு.க., - கோவி.செழியன்: தி.மு.க., எதுவும் செய்யவில்லை என, அமைச்சர் விஸ்வநாதன் கூறுகிறார். மேலுார் தொகுதியில், தி.மு.க., தொண்டர்களால் வெற்றி பெற்று, இன்று அமைச்சராகி உள்ளீர்கள். கருப்பு, சிவப்பு வேட்டி கட்டிய தொண்டனின் உழைப்பே அதற்கு காரணம்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் வெற்றிக்கு தி.மு.க.,வே காரணம் என்று சொல்லி வருகின்றனர். 22 கட்சிகள் கூட்டணியுடன், தி.மு.க., போட்டியிட்டு வென்று வந்துள்ளது. ஆனால், த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக, 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ், வி.சி.க., - கம்யூ., - ஐ.யு.எம்.எல்., இல்லை என்றால், தி.மு.க., 10 இடங்களில் கூட வெற்றி பெற்றிருக்காது. சென்னையில் கூட்டணி கட்சிகளால்தான், தி.மு.க.,வுக்கு முஸ்லிம்களின் ஓட்டுகள் கிடைத்தன. சென்னையில், 16 தொகுதிகளில், 14ல், தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது. கூட்டணி கட்சிகளின், 15 சதவீத ஓட்டுக்கள் இல்லை என்றால், சென்னையில், இந்த இரு தொகுதிகளில் கூட தி.மு.க., வெற்றி பெற்றிருக்காது.

தி.மு.க., இன்று எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பதற்கு, காங்கிரஸ், வி.சி.க., - கம்யூ., மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளே காரணம். எங்களை போல தனித்து போட்டியிட்டு தி.மு.க.வால், 50 தொகுதியில் வெற்றி பெற முடியுமா?

தி.மு.க., - கோவி.செழியன்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையான போது, தி.மு.க., ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றது. அதையும் ராஜினாமா செய்தனர். பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும், தமிழகத்தை தி.மு.க., ஆண்டது.

தி.மு.க., - கே.என்.நேரு: எங்களுடைய கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் தான், த.வெ.க., ஆட்சி அமைத்துள்ளது. உங்களுக்கு ரோசம் இருந்தால், அவர்களை வெளியே அனுப்பி விட்டு, தனியாக ஆட்சி அமையுங்கள்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த அடையாளம் உண்டு. யாரும், யாருக்கும் அடிமை கிடையாது. யாருடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது, அவர்களின் நிலைப்பாடு. தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிந்து விடும்.

தி.மு.க., - கே.என்.நேரு: எங்களை விட்டு விட்டு, காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதா?

அமைச்சர் செங்கோட்டையன்: 2006ல், 97 எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு, காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தீர்கள். காங்கிரசுக்கு ஏதாவது உதவி செய்தீர்களா?

தி.மு.க., - கே.என்.நேரு: காங்கிரஸ் தலைவரை பிரதமராக அறிவித்தது தி.மு.க., தான்,

அமைச்சர் செங்கோட்டையன்: மத்தியில், 11 அமைச்சர்களை பெற்றுத்தான், இதை செய்தீர்கள்.

காங்கிரஸ் - தாரகை கத்பட்: காங்கிரசுடனான கூட்டணியால் தான், தி.மு.க.,வுக்கு அதிக அளவிலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்துள்ளனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.