📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 25, 2026 06:04 PM

கூட்டணி கட்சிகளால் கிடைத்த வெற்றி

கூட்டணி கட்சிகளால் கிடைத்த வெற்றி

கூட்டணி கட்சிகளால் கிடைத்த வெற்றி- திமுக, தவெக, காங்கிரஸ் காரசார விவாதம்

"எங்கள் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்களை கொண்டு தான் ஆட்சியமைத்துள்ளீர்கள்" என்று தவெகவை பார்த்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.

Published : August 24, 2026 at 5:46 PM IST

சென்னை: காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் தேர்தலில் திமுக 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது என்று அமைச்சர் ஆதவ் ஆதவ் அர்ஜுனா கூறியதால், சட்டப் பேரவையில் தவெக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் பேசுகையில், திமுக ஆட்சியில் காலத்தில் தான் பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், காங்கிரஸ் கட்சியில் தான் பட்டியலின சமூகத்தினருக்கு முதலில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் முதல்வர் விஜய்யின் ஆட்சியில் தான் உயர்கல்வித் துறை அமைச்சரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக பேரவையில் திமுக, தவெக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அமைச்சர் விஸ்வநாதன் (காங்கிரஸ்): பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு அரசியல் பதவி, அதிகாரம் கொடுத்தது திமுக என்று சொன்னார்கள். ஆனால், முதலமைச்சர் விஜய் ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் காலியாக உள்ளது. அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் துணைவேந்தர் இருக்கிறார். நீங்கள் என்னவோ இந்த நாட்டுக்காக போரிட்டது போலவும், சமூகப் புரட்சிக்கு வித்திட்டது போலவும் பேசுகிறீர்கள். நாங்கள் பச்சை தமிழர்கள். நாங்கள் துணை வேந்தர் நியமனம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு தான் இந்த அவையில் கருத்தை வைக்கிறோம்.

கோவி.செழியன் (திமுக): மேலூர் என்ற பொதுத் தொகுதியில் உங்களை நிற்க வைத்தது திமுக. உண்மையான கறுப்பு -சிவப்பு வேட்டி கட்டியவன் உழைப்பால் தான் உங்களுக்கு ஓட்டு விழுந்தது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா (தவெக): காங்கிரஸ், விசிக வெற்றி பெற்றதற்கு நாங்கள் தான் காரணம் என்று திமுகவினர் சொல்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக 25 கட்சிகள் வரை கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தீர்கள். நீங்கள் தான் ஆளும் கட்சி. ஆனால் 2026-ல் தவெக தனிக்கட்சியாக நின்று வெற்றி பெற்றுள்ளது. அதுவே திமுக தனித்து போட்டியிட்டிருந்தால் 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்று இருக்காது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகிய 23 கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றால் திமுக வெற்றி வெற்றி பெற்றிருக்காது.

சென்னையிலும் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றதற்கு காரணம், சிறுபான்மையினரின் வாக்குகள் தான். நீங்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பதற்கு காரணம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தான். ஒரே ஒரு தேர்தலில் திமுக தனியாக நின்று 50 தொகுதிகளில் வெற்றி பெற சொல்லுங்கள். அப்போது தான் கூட்டணிக் கட்சியினரின் அருமை புரியும்.

கோவி.செழியன் (திமுக): ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு ஒரே ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற்றோம். அதையும் ராஜிநாமா செய்தோம். பூஜ்ஜியத்தில் இருந்து வந்தது திமுக. எதையும் எதிர் கொள்ள தாயாராக இருக்கிறது திமுக.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு (திமுக): கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்கள் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்கள் உடன் தான் நீங்கள் (தவெக) ஆட்சி அமைத்துள்ளீர்கள். உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா (தவெக): யாரும் யாருக்கும் அடிமை இல்லை. தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிந்து விடும். யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட முடிவு. நாங்கள் தவறாக பேசவில்லை. திமுக ஆதிக்க மனப்பான்மையுடன் இருப்பதைத்தான் கேள்வி கேட்கிறோம். அது தான் தவறு.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது என்பதை ஏற்று கொள்வோம்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு (திமுக): எங்கள் கூட்டணியில் இருந்து வெளியே சென்று தனியாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்களா என சொல்லுங்கள்? திமுக இல்லாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது.

அமைச்சர் செங்கோட்டையன் (தவெக): மானிய கோரிக்கை பற்றி பேசுவதை விட்டுவிட்டு மாறி மாறி அரசியல் பேசி கொண்டு உள்ளோம். திமுக ஆட்சி அமைக்க உதவிய காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் இடம் கொடுத்தீர்களா? ஒரு தேர்தலிலாவது திமுக தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளதா?

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு (திமுக): மத்திய அரசு அமைவதற்கு இரண்டு முறை ஆதரவாக இருந்தது திமுக. எங்கள் ஆதரவில் மத்திய அரசை அமைத்து விட்டு நாங்கள் ஆதரவு தரவில்லை என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் ஆதரவு மட்டும் இல்லை. அப்போது பாமகவின் 21 எம்எல்ஏக்களின் ஆதரவும் எங்களுக்கு கிடைத்தது.

அமைச்சர் செங்கோட்டையன் (தவெக): கடந்த காலத்தில் 11 அமைச்சர்களை காங்கிரஸ் இடமிருந்து பெற்றுக் கொண்டு தான் திமுக ஆதரவு கொடுத்தது. அதை மறக்கக் கூடாது.

காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்: ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடந்தியதால் தான் திமுகவுக்கு இவ்வளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. உங்களுக்காக நாங்கள் பயணித்தோம். இன்று எங்களுக்கான ஆட்சி வரும் போது நாங்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தோம். 22 ஆண்டுகள் நாங்கள் உங்களுடன் உங்களுக்காக பயணித்தோம். இல்லை என்று சொல்லவில்லை. இன்று எங்களுக்கான ஆட்சி வரும் போது நாங்கள் தவெகவிற்கு துணை நிற்கிறோம்.

இவ்வாறு தவெக, திமுக, காங்கிரஸ் இடையே நீண்ட நேரம் விவாதம் தொடர்ந்தது.