📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 25, 2026 03:04 PM

லட்சக்கணக்கானோர் செய்த தவறால் கோடிக்கணக்கானோர் துன்புறுகின்றனர்: த.வெ.க., மீது ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

லட்சக்கணக்கானோர் செய்த தவறால் கோடிக்கணக்கானோர் துன்புறுகின்றனர்: த.வெ.க., மீது ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

சென்னை: ''லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, இன்றைக்கு, கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக் கொண்டு இருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குநர் அமிர்தம் இல்ல திருமண விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது:

என் தந்தை கருணாநிதியின் சகோதரி மகன் அமிர்தம்; அதாவது என் அத்தை மகன். கருணாநிதியின் இன்னொரு சகோதரியின் மகன்கள் மாறன், செல்வம். நான், முத்து, அழகிரி, தமிழரசு, செல்வி ஆகியோரை, இந்த மூவரும்தான் வளர்த்தனர். அமிர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் டாக்டர்களாக உள்ளனர்.

முன்பெல்லாம், இதுபோல படித்தவர்கள், பட்டதாரிகள், அத்தி பூத்தது போல ஏதேனும் ஒரு குடும்பத்தில் தான் இருப்பர். ஆனால், இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டுக்கு வீடு பட்டதாரிகள், டாக்டர்கள் உள்ளனர். இதற்கு யார் காரணம் என்பதை, இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில், ஒரு மாற்றம் ஏற்பட்டு, ஏமாற்றமாக மாறியிருக்கிறது.

லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்கு துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். வரும் காலகட்டங்களில் சிறப்பான முறையில் சிந்தித்து, இளைஞர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

'தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்திற்கு, வெள்ளை அடித்து, வாடகைக்கு விட்டு விட்டு, வேறு வேலையை பார்க்க தி.மு.க.,வினர் சென்று விடுவர்' என, சட்ட அமைச்சர் நிர்மல் குமார் பேசி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், திருமண நிகழ்ச்சியில், தி.மு.க., துணை பொதுச்செயலரான ராஜா எம்.பி., பேசுகையில், ''அறிவாலயம் தோன்றிய பின் தான், தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு பலமுறை வெள்ளை அடித்துக் கொண்டனர். தமிழகமே தனக்கு வெள்ளை அடித்துக் கொண்டது. அந்த அறிவாலயத்தை குறை சொல்கிற ஒரு தறுதலை கூட்டம், இன்றைக்கு தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது,'' என்றார்.