மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் தாருங்கள்: கர்நாடகா முதல்வர் சிவகுமார்
மைசூரு: ''மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்,'' என, காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நமக்கு கே.ஆர்.எஸ்., அணை மிகவும் அத்தியாவசியமானது. நாம் காவிரி நீரை பாதுகாக்க வேண்டும். மழையால் கிடைக்கும் நீரை, நல்ல முறையில் பயன்படுத்த மேகதாது அணை உதவியாக இருக்கும்.
மேகதாது திட்டத்துக்கு வனப்பகுதி உட்பட, 10,800 ஏக்கர் நிலங்கள் தேவைப்படும். வனப்பகுதிக்கு பதிலாக மாற்று நிலத்தை பயன்படுத்தவும் அரசு தயாராகிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை அனுப்பப்படும்.
சமீபத்தில் நான் தமிழகத்துக்கு சென்ற போது, மேகதாது திட்டம் குறித்து பேசினேன். கர்நாடகாவில் உள்ள காவிரி போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும்.
துங்கபத்ரா அணை பிரச்னைக்கு தீர்வு காண, மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் கலந்தாலோசித்தது வரவேற்கத்தக்கது. துங்கபத்ரா அணையில், 33 டி.எம்.சி., அளவுக்கு மண் நிரம்பியுள்ளது. இதை அப்புறப்படுத்த, மத்திய அரசு புதிய கொள்கைவகுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.