மேலூரில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
மேலூரில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்லைன் வர்த்தக மோசடியால் பாதிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட முதியவர்களும் பெண்களும் புகார் அளிக்கக் காத்திருக்கிறார்கள். அங்குப் பெண்கள் அதிகளவில் திரண்டுள்ளதால், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தனி வரிசை அமைக்கப்பட்டுப் புகார் மனுக்கள் வாங்கப்படுகின்றன.
தற்போது வரை 1,527 நபர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலூர் துணைக்கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் 10க்கு மேற்பட்ட காவலர்கள் பொதுமக்களிடமிருந்து வரிசையாகப் புகார் மனுக்களைப் பெற்று வருகின்றனர். இதனிடையே, முகவராகச் செயல்பட்ட கட்டையப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரைக் கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் மேலூர் - திருச்சி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது அவர்களிடம் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், அதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட முயன்று, அங்கு திரண்டு நிற்கின்றனர். இதனால் மேலூர் பகுதியே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.