📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 05, 2026 10:03 PM

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா; உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா; உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா; உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 58 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Published : September 5, 2026 at 7:58 PM IST

மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வரும் செப்.17- ஆம் தேதி மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மஹா கும்பாபிஷேக விழாவிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று (செப்.05) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் வினய் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகள் மற்றும் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகத்தையோட்டி அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். கும்பாபிஷேகத்தையோட்டி திருக்கோயிலில் நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.

தற்போது கும்பாபிஷேகத்திற்காக செய்ய வேண்டிய பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது; கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 58 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் திருக்கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது; கும்பாபிஷேகம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மஹா கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நாளை (செப்.06) தொடங்குகின்றது. விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.