📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 03, 2026 04:07 PM

மின்சார வாகன மின்னூட்டு நிறுவனங்கள் இணைவது நிபந்தனையுடன் ஏற்பு

மின்சார வாகன மின்னூட்டு நிறுவனங்கள் இணைவது நிபந்தனையுடன் ஏற்பு

மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் சேவைகளை வழங்கும் ‘எஸ்பி மோபிலிட்டி’, அதன் போட்டி நிறுவனமான ‘சார்ஜ்இக்கோ’வை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

அந்தப் பரிவர்த்தனைக்கு நிபந்தனைகளோடு ஒப்புதல் வழங்கியுள்ளதாக சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் வியாழக்கிழமை (மே 28) அறிக்கை மூலம் தெரிவித்தது. சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வாகன நிறுத்துமிடங்களில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டுவதற்கான கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது அந்த நிபந்தனைகளில் அடங்கும்.

கிழக்குப் பகுதியில் உள்ள வீவக வாகன நிறுத்துமிடங்களில் மின்னூட்டுச் சேவைகளை வழங்குவதற்கான குத்தகைகள் ‘எஸ்பி மோபிலிட்டி’, ‘சார்ஜ்இக்கோ’ இரண்டுக்கும் வழங்கப்பட்டன.

பெரிய அளவில் பொது இடங்களில் மின்சார வாகன மின்னூட்டுப் பகுதிகளை அமைக்கும் பணிகளை நிலப் போக்குவரத்து ஆணையம் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொண்டது. அதன்கீழ் அவ்விரு நிறுவனங்களுக்கும் குத்தகை வழங்கப்பட்டது.

மின்னூட்டுச் சேவைகளுக்காகக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது; இச்சேவைகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் அமைப்புகளுக்கு ஏற்படும் செலவுக்கான கட்டணம், ‘எஸ்பி மோபிலிட்டி’யின் கட்டுப்பாட்டை மீறி ஏற்படும் செலவு ஆகியவை மட்டுமே விதிவிலக்குகள்.

மற்றொரு நிபந்தனை, சம்பந்தப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களுக்கு மின்னூட்டிக்கொள்ளும் மின்சார வாகன ஓட்டுநர்களை விலைக் கழிவு, சலுகைத் திட்டங்கள் ஆகியவை சென்றடைவதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பது.

‘எஸ்பி மோபிலிட்டி’ ஏற்றுக்கொள்ளும் இந்த நிபந்தனைகள் மே 28ஆம் தேதி முதல் மூவாண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கிழக்குப் பகுதியில் இருக்கும் வீவக வாகன நிறுத்துமிட மின்னூட்டுப் பகுதிகளில் சேவையைப் பயன்படுத்தக் கட்டணத்தில் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டால் சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்திடம் தெரியப்படுத்தப்போவதாக ‘எஸ்பி மோபிலிட்டி’ உறுதியளித்துள்ளது.

மேலும் அது, நிலப் போக்குவரத்து ஆணையத்தின்கீழ் இயங்கும் நிறுவனமான ‘இவி-எலெக்ட்ரிக்’கிடமும் தெரியப்படுத்தவேண்டும். ‘இவி-எலெக்ட்ரிக்’, மின்சார வாகன மின்னூட்டுப் பகுதிகளை அமைத்துத்தரும் பொறுப்பில் உள்ள நிறுவனமாகும்.