மகளிர் ஆசிய கோப்பை 2026: ஷபாலி வர்மா அதிவேக 50.. முதல் விக்கெட்டுக்கு ஸ்மிருதி மந்தனா உடன் சாதனை
மகளிர் ஆசிய கோப்பை 2026: ஷபாலி வர்மா அதிவேக 50.. முதல் விக்கெட்டுக்கு ஸ்மிருதி மந்தனா உடன் சாதனை
துபாய்: மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். வெறும் 24 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், மகளிர் ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே அதிவேகமாக அரைசதம் கடந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகவே 25 பந்துகளில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது தனது தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனாவின் சாதனையை ஷஃபாலி வர்மா முறியடித்துள்ளார்.
மேலும், நடப்புத் தொடரில் ஷஃபாலி வர்மா அடிக்கும் மூன்றாவது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் மகளிர் டி20 ஆசியக் கோப்பையின் ஒற்றை சீசனில் அதிக அரைசதங்கள் அடித்த வீராங்கனையான சமாரி அதபத்துவின் 2024 இல் 3 அரைசதங்கள் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.
அதிவேக அரைசதம் மட்டுமின்றி, இந்தியத் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை மற்றொரு இமாலய உலக சாதனையையும் இப்போட்டியில் படைத்துள்ளது. மகளிர் டி20 இறுதிப் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை இவர்கள் இருவரும் நிகழ்த்தியுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் குவித்து அசத்தியது. இதற்கு முன் 2016 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஹேலி மேத்யூஸ் மற்றும் ஸ்டாஃபனி டெய்லர் ஜோடி 120 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்திய இணை தகர்த்தெறிந்துள்ளது.