மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி-யை சிறையில் அடைக்க உத்தரவு..!!
சிவகங்கை: மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், டிஎஸ்பி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் காவலாளியாக இருந்த அஜித் குமார், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. முதல்கட்டமாக, தனிப்படை காவலர்கள் கண்ணன் ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, சிபிசிஐடி தரப்பில் இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சிவகுமார், காவலர் ரமேஷ்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய நான்கு பேரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தாமோதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிதாக சேர்க்கப்பட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே உள்ள 6 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது டிஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேரையும் வரும் 16ஆம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், டிஎஸ்பி உள்பட மொத்தம் 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.