முதலமைச்சரை சாடிய உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சரை சாடிய உதயநிதி ஸ்டாலின் - எதிர்வினையாற்றிய தவெக ஐடி விங்க்
மேடை கிடைத்துவிட்டால் கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது என உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங்க் பதிலடி கொடுத்துள்ளது.
Published : September 26, 2026 at 11:02 PM IST
திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது முதலமைச்சரை கடுமையாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், தவெகவின் ஐடி விங்க் பதிலடி கொடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (செப்.26) தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கொளத்துப்பாளையம் பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஐந்து மாதங்களுக்கு முன்பு இதே தாராபுரத்திற்கு வந்தேன்; திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைத்தேன். நீங்களும் வாக்களித்து வெற்றி பெற வைப்போம் என்று சொன்னீர்கள். ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். இன்றைக்கு மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வந்திருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்?
முதுகில் குத்திய கூட்டணி கட்சிகள்
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் ஒரு கட்சிக்கு குறைந்தது 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாக வேண்டும். ஆனால் இன்று அமைந்திருக்கும் இந்த அரசு, அறுதிப் பெரும்பான்மை பெற்ற அரசா? தமிழ்நாட்டு மக்கள் வெறும் 107 எம்எல்ஏக்களை தான் (தவெக) தேர்வு செய்து அனுப்பி வைத்தீர்கள். இன்றைக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மே 10- ஆம் தேதி முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெரும்பான்மையோடு சென்று பொறுப்பேற்றுக் கொண்டாரா? கிடையாது. அவருக்கு கிடைத்தது வெறும் 107 எம்எல்ஏக்கள் தான். என்ன செய்தார்? நமது கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகள், மீண்டும் தமிழ்நாட்டுக்குள் ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து போனார்கள். ஒரு சிலர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். ஒரு சிலர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லாமலேயே திருட்டு தனமாகப் போனார்கள். அது யார் என்று உங்களுக்கு தெரியும். முதுகில் குத்திய துரோகிகளை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் மறக்கமாட்டார்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் முதுகில் குத்தியுள்ளார். அவங்களுக்கு திருப்பி அந்த வாய்ப்பைக் கொடுப்பீர்களா? அதிமுக தலைவர்களின் வீட்டிற்கு சென்று அவரே சோபாவை டெலிவரி செய்தார். கையில் சோபா உடனே சென்றார். தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீட்டிற்கும் சோபா சென்றது.
திமுக எம்எல்ஏவைப் பார்த்தால் வழக்குப் போடுகிறார்கள்
சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரான நான் பேசும்போது, உங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடையாது. 118 நம்பர்ஸ் வேண்டும், உங்களுக்கு கிடையாது. எங்கள் தயவில் திமுக தலைவரின் பெயரைச் சொல்லி திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குக்கேட்டு வெற்றி பெற்றவர்களின் தயவில், எங்கள் தயவில் ஆட்சி அமைக்கிறீர்கள்; அதுமட்டுமல்ல அதிமுகவை இரண்டாக பிளந்துவிட்டீர்கள். அதில் உள்ள ஒரு குரூப் உங்களுக்கு வாக்களிப்பார்கள். அதை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சியமைக்கப் போகிறீர்கள்; இதைப் பார்க்க நாங்கள் உள்ளே இருக்க மாட்டோம்; வெளிநடப்பு செய்கிறோம் என்று வெளிநடப்பு செய்தோம். இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து திமுக எம்எல்ஏவை பார்த்தால் வழக்குப்போடுவது, அதிமுக எம்எல்ஏவை பார்த்தால் பெட்டிக் கொடுப்பது, அதை அவர்கள் வாங்குவது" என்று தவெக அரசையும், முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்தார்.
சட்டமன்றத்தில் உங்களுக்காகக் குரல் கொடுப்பார்
"சகோதரி சுகன்யாவுக்கு திமுக சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். சுகன்யா நன்கு படித்தவர், சட்டம் படித்தவர், வழக்கறிஞர், உங்களுக்காக உங்கள் தொகுதிக்காக சட்டமன்றத்தில் நிச்சயம் குரல் கொடுக்கக் கூடியவர்" என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
உதயநிதிக்கு தவெக பதிலடி
தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங்க் பதிலடி கொடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா? பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது? மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது. எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! #VulgarUdhayanidhi
இது குறித்து தவெகவின் ஐடி விங்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், "எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா? பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும், ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது. எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.