முதல்வர் விஜயின் புதிய அலுவலகம்.. அரசின் டெண்டரில் முறைகேடா? சட்டப்பேரவையில் வெடித்த மோதல்!
முதல்வர் விஜயின் புதிய அலுவலகம்.. அரசின் டெண்டரில் முறைகேடா? சட்டப்பேரவையில் வெடித்த மோதல்!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பாரம்பரியமான புனித ஜார்ஜ் கோட்டை கட்டடத்தில், முதல்வரின் அலுவலகம் இயங்கிவருகிறது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர்கள் எல்லாரும் இந்த அறையில் இருந்தே பணிகளை மேற்கொண்டனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதும், அவரும் இந்த அறையில் இருந்தே தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இந்த கட்டடத்துக்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடிக்கு, முதல்வர் அலுவலகத்தை இடமாற்றும் பணி தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் அலுவலகத்தை இடமாற்றும் பணிக்கான வேலைகளில் முறைகேடு நடந்துள்ளதாக Times of india நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், முதல்வரின் புதிய அறையின் பணிகளை மேற்கொள்வதற்காக ஆன்லைன் டெண்டர் இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு முன்பே, இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அச்சிடப்பட்ட விளம்பரத்தில் 5.54 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் டெண்டர் ஆவணங்களில் மொத்த திட்ட மதிப்பீடோ அல்லது ஒவ்வொரு பணிக்குமான தனித்தனி செலவு விவரங்களோ குறிப்பிடப்படாமல் விடுக்கப்பட்டிருந்தன என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் திமுக MLA-வும், முன்னாள் அமைச்சருமான எ.வ வேலு, ”முதல்வர் விஜயின் புதிய அறையின் பணிகள் முடிந்தபிறகு, ஆன்லைனில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது, முதல்வர் அறை மாற்ற வேண்டிய அவசியம் என்ன” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”பத்திரிகைச் செய்தி தவறானது, டெண்டர் இன்னும் முடியவில்லை என்றும், முதல்வர் விஜய் தனது வசதிக்காக இல்லாமல், தன்னை சுற்றியுள்ள அதிகாரிகளுக்கு ஒரு நல்ல வசதியான இடம் வேண்டும் என்பதற்காகதான் தன்னுடைய அலுவலகத்தை மாற்றுகிறார். இது ஒரு தற்காலிக இடமாற்றம்” என்று விளக்கமளித்தார்.