📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 02, 2026 12:03 PM

நாக தோஷம்... ஜலதோஷம்... சட்டசபையில் கலகல விவாதம்

நாக தோஷம்... ஜலதோஷம்... சட்டசபையில் கலகல விவாதம்

பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்து வருகிறார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்,

சட்டசபை ஆரம்பித்து அமைச்சர் பாம்பு கடி தொடர்பாக உரிய விளக்கத்தை அளித்து வருகிறார். இன்றைக்கு நான் அறிந்தது, பல்வேறு நிறைய தொகுதிகளில் பாம்பு கடி உள்ளதாக அறிகிறேன். அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். ஆகவே, பேரவை தலைவர் முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல் பூர்வமான அரசாக மேற்கொண்டு இருக்கிறோம். தோஷம், பில்லி சூனியம் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய தொகுதிக்கு தோஷம் நிவர்த்தி மேற்கொள்ளலாம். மாநில அளவில் அறிவியல் பூர்வமான முயற்சிகள் மட்டும் தான் நாம் எடுப்போம். ஜலதோஷம் தான் அதிகம் இருக்கு. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருக்குற மாதிரி நாம் கேள்விபடலை என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விரும்பினால் இந்த தோஷம் கழிப்பதற்கு உரியவர்களை அனுப்பி வைப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை. விருப்பமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுக கூடியவர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையாகவே ஜலதோஷத்தை பற்றி தான். எங்களுடைய துணை தலைவருக்கு உண்மையாகவே ஜலதோஷம். அவருக்கு 2 நாட்கள் உடல்நிலை சரியில்லை. அதற்கும் தீர்வு காணவேண்டும் என்றார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.