📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 06:03 PM

நெல், கரும்புக்கு ஒரே ஆண்டில் ஊக்கத்தொகை உயர்வு

நெல், கரும்புக்கு ஒரே ஆண்டில் ஊக்கத்தொகை உயர்வு

நெல், கரும்புக்கு ஒரே ஆண்டில் ஊக்கத்தொகை உயர்வு - வேளாண் துறை அமைச்சர் வினோத் பெருமிதம்

தவெக அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களில், சன்ன ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.133 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

Published : August 10, 2026 at 4:20 PM IST

சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில் நெல்லுக்கும், கரும்புக்கும் ஒரே ஆண்டில் ஊக்கத்தொகை உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர் வினோத், "கடந்த ஆட்சியில் நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.3,500 உயர்த்தி வழங்கப்படும் என அவர்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். எனினும், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு எந்த ஆண்டும் உயர்த்தவில்லை.

சாதாரண ரக நெல்லைப் பொறுத்தவரை, 2021-22 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.1,940க்கு, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு, மொத்தம் ரூ.2,015 வழங்கப்பட்டது.

2022-23 ஆம் ஆண்டில் ஊக்கத்தொகை உயர்த்தப்படவில்லை. 2023-24ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 உயர்த்தப்பட்டு, ரூ.82 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. 2024-25ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.23 உயர்த்தப்பட்டு, ரூ.105 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

2025-26ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.26 உயர்த்தப்பட்டு, ரூ.131 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களில், சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.28 கூடுதலாக உயர்த்தப்பட்டு, ரூ.159 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2,600 பெறுவார்கள்.

சன்னரக நெல்லை பொறுத்தவரையில் 2021-22-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.1,960-க்கு, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு, மொத்தம் ரூ.2,060 வழங்கப்பட்டது.

2022-23ஆம் ஆண்டில் ஊக்கத்தொகை உயர்த்தப்படவில்லை. 2023-24ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 உயர்த்தப்பட்டு, ரூ.107 வழங்கப்பட்டது. 2024-25ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.23 உயர்த்தப்பட்டு, ரூ.130 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. 2025-26ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.26 உயர்த்தப்பட்டு, ரூ.156 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களில், சன்ன ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.133 கூடுதலாக உயர்த்தப்பட்டு, ரூ.289 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,750 பெறுவார்கள்.

2021-22ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.2,755-க்கு, சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 அறிவிக்கப்பட்டு, மொத்தம் ரூ.2,950 வழங்கப்பட்டது.

2022-23 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் ஊக்கத்தொகை உயர்த்தப்படவில்லை. 2023-24ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில், மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.20 உயர்த்தப்பட்டு, ரூ.215 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. 2024-25ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில், மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.134 உயர்த்தப்பட்டு, ரூ.349 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

2025-26ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.3,290.50-க்கு, சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.709.50 வழங்கப்படுகிறது. இதன்மூலம் கரும்பு விவசாயிகள் ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.4,000 பெறுவார்கள்.

இதனால், நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை ஒரே ஆண்டில் தமிழக வரலாற்றிலேயே இந்த அளவுக்கு உயர்த்தியது தமிழக வெற்றிக் கழக அரசு மட்டுமே என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்