ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி வகுப்புகளை புறக்கணித்து புது கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி வகுப்புகளை புறக்கணித்து புது கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பேரணியாகச் சென்ற மாணவ, மாணவிகள், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
Published : October 12, 2026 at 4:25 PM IST
சென்னை: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு பொறுப்பேற்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) மற்றும் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் இடதுசாரிகள், மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவ, மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கருப்பு உடை அணிந்து வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக பேரணியாகச் சென்ற மாணவர்கள், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து புது கல்லூரி மாணவர்கள் கூறுகையில், "எஸ்ஐஆருக்கு எதிராக கையெழுத்து இயக்கம், Campaign என பல்வேறு வடிவங்களில் எங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை எங்களது போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக டெல்லி போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் முன்னாள் முதலமைச்சர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாணிக் சர்க்கார், பினராயி விஜயன் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.