📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 07, 2026 05:03 PM

நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக்காவல் விதிகள் அறிவிப்பு

நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக்காவல் விதிகள் அறிவிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு, அவரது வீட்டுக்காவல் தொடர்பான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சட்ட விவகாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஸாம்ரி மிஸ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சேவைச் சட்டம் 2025 குறித்து அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த விவரங்கள் நஜிப்பிற்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டன,” என்று கூறினார்.

அந்தச் செய்தியாளர் கூட்டத்தில் உடன் இருந்த சட்ட, நிறுவனச் சீர்திருத்த அமைச்சர் அஸாலினா ஓத்மான் சையது, அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மலேசியாவின் சிறைத்துறை, நஜிப்பின் வீட்டுக்காவல் தொடர்பான செயல்பாட்டு நடைமுறைகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 6ஆம் தேதியிடப்பட்ட எழுத்துபூர்வ பதிலில், வருகையாளர்கள் அனுமதி, நடமாட்டக் கண்காணிப்பு உள்ளிட்ட வீட்டுக்காவலுக்கான நிபந்தனைகள், தகுந்த செயல்பாட்டு நடைமுறைகள் மூலம் விரிவாக விளக்கப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

நஜிப்பின் பெயரைக் குறிப்பிடாமல், நிபந்தனையுடன்கூடிய மன்னிப்பின்கீழ் வீட்டில் தங்க வைப்பது, முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தின்கீழ் வழங்கப்படும் வீட்டுக்காவலில் இருந்து வேறுபட்டது என்றும் அமைச்சு கூறியது.

“எனவே, நிபந்தனையுடன்கூடிய மன்னிப்பு முடிவைத் தொடர்ந்து, வீட்டில் தங்க வைப்பதை ஒரு குறிப்பிட்ட சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் வீட்டுக்காவல் உத்தரவுடன் நேரடியாகச் சமமாகப் பார்க்க முடியாது,” என்று அது குறிப்பிட்டது.

வீட்டுக்காவல் மசோதாவை வரையும் பணி உறுதி செய்யப்படாமல் உள்ளதாகவும் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வழக்கு விசாரணைக்காகக் காத்திருக்கும் தகுதிபெறும் கைதிகளைச் சிறையில் அடைப்பதற்கு மாறாக, வீட்டில் தங்க வைப்பதற்கான சட்டக் கட்டமைப்புக்கு அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சு கூறியது.

73 வயது நஜிப், 2022 ஆகஸ்ட் 23ஆம் தேதிமுதல் சிலாங்கூரில் உள்ள காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவின் அரசாங்க நிதியமான 1எம்டிபி-யின் கீழ் செயல்பட்ட முன்னாள் ‘எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்’ நிறுவனத்துக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை (S$13.1 மில்லியன்) கையாடியதற்காக அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.