📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 23, 2026 08:03 AM

நகராட்சிகளில் ரெய்டு; வசமாக சிக்கிய இன்ஜினியர்

நகராட்சிகளில் ரெய்டு; வசமாக சிக்கிய இன்ஜினியர்

- நமது நிருபர் குழு -

தமிழகம் முழுதும், 40 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

'முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியில், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. லஞ்சம் வாங்குவோர், ஊழல் செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .

அதற்கேற்ப, மாநிலம் முழுதும் உள்ள அரசு அலுவலகங்களை, லஞ்ச ஒழிப்பு போலீசின் நுண்ணறிவு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், தங்களிடம் அளிக்கப்படும் புகார்களையும் விசாரித்து, கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த மாதம் தமிழகம் முழுதும் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் என, 38 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 1.18 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.

பணப்பரிவர்த்தனை செயலியான, 'கூகுள் பே' வாயிலாக, சந்தேகப்படும்படி, அரசு அதிகாரிகள், ஊழியர்கள், 89.89 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

கடந்த ஆகஸ்ட்டில், லஞ்சம் வாங்கிய புகாரில், ஆர்.டி.ஓ., வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர், உதவி மின்பொறியாளர், மின் வாரிய வணிக ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் என, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக, அத்துறையின் அமைச்சராக இருந்த நேருவின் வீடு உட்பட, 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 241 ஆவணங்களை கைப்பற்றி, அதை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள் வந்தன. அதைதொடர்ந்து, நேற்று மாநிலம் முழுதும், 40 இடங்களில் உள்ள, நகராட்சி அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், பல்வேறு குழுக்களாக சென்று சோதனை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 4 கோடி ரூபாயில், சாலை அமைக்கும் பணிகளை, ராமநாதபுரம் மாவட்ட ஒப்பந்ததாரர் ஒருவர் செய்து வருகிறார். அவரிடம் இப்பணிக்கான பில் தொகையை விடுவிக்க, 4 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என பொறியாளர் பட்டுராஜன், 52, என்பவர் கூறியுள்ளார்.

முதல் தவணையாக, 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், இதுபற்றி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, ஒப்பந்ததாரரின் கம்பெனி ஊழியர் ஒருவரிடம் ரசாயனம் தடவிய, 2 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். நேற்று மதியம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் இருந்த பொறியாளர் பட்டுராஜனிடம், அந்த ஊழியர் பணத்தை கொடுத்தார்.

உடனே அவர், நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் சேதுபதியை அழைத்து பணத்தை கொடுத்து, வாகனத்தில் வைக்கும்படி கூறியுள்ளார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கராமன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், எஸ்.ஐ., கோகிலா மற்றும் போலீசார், இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

ரூ.1.73 கோடி பறிமுதல் தமிழகத்தில், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், நேற்று நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத பணம், 1.73 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 'கூகுள் பே' வழியே 1.60 கோடி ரூபாய், ஊழியர்கள் லஞ்ச பணமாக பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சோதனையின்போது, ராமநாதபுரம் பஸ் நிலையத்தில், இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில், 20 ரூபாய்க்கான போலி கட்டண ரசீது வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 100 ரசீது அடங்கிய, 59 போலி ரசீது புத்தகம் மற்றும் கணக்கில் வராத பணம் 12,750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என, லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.