📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 10, 2026 04:04 PM

"நரேந்திரா என்ற பெயரே வெறுப்பாக இருக்கிறது".. பாகிஸ்தான் வீரர் சம்பவம்.. சிரித்த பிரதமர் மோடி

"நரேந்திரா என்ற பெயரே வெறுப்பாக இருக்கிறது".. பாகிஸ்தான் வீரர் சம்பவம்.. சிரித்த பிரதமர் மோடி

"நரேந்திரா என்ற பெயரே வெறுப்பாக இருக்கிறது".. பாகிஸ்தான் வீரர் சம்பவம்.. சிரித்த பிரதமர் மோடி

டெல்லி: ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடந்த 2026 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பாகிஸ்தான் வீரருடன் நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட அரங்கில் இருந்த அனைவரும் சத்தமாக சிரித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிரதமர் இல்லத்தில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது நரேந்தர் பெர்வால் கூறியதாவது - "கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் எனது முதல் சுற்றில் பாகிஸ்தான் வீரருடன் மோத வேண்டி இருந்தது. அப்போது ராணுவத்தில் உள்ள எனது சக ஊழியர்கள், பாகிஸ்தானிடம் மட்டும் தோற்றுவிடக் கூடாது என்று கூறினர். அந்தப் போட்டியில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் இருவருக்கும் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றோம்.

அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் வீரர் என்னிடம், "உன்னுடைய பெயர் நரேந்தர், உனது பயிற்சியாளர் பெயரும் நரேந்தர், உங்களது நாட்டின் பிரதமர் பெயரும் நரேந்திர மோடி. இதனால் எனக்கு நரேந்திரா என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது" என்று கூறினார். இதைக் கேட்டவுடன் பிரதமர் மோடி வாய்விட்டு சத்தமாக சிரித்தார்.

இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரியாக இருக்கும் நரேந்தர் பெர்வால், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 90+ கிலோ எடைப்பிரிவில் நரேந்தர் பெர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்த தொடரில் இந்திய குத்துச்சண்டை அணி 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா இந்த காமன்வெல்த் தொடரில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 4 வது இடத்தைப் பிடித்தது. அடுத்ததாக 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத் நடத்த உள்ளது.