பாகிஸ்தான் பேட்டிங் கிங்
பாகிஸ்தான் பேட்டிங் கிங்-குக்கே இந்த நிலைமையா? பாபர் அசாமுக்கு நேர்ந்த கதி.. என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என படுதோல்வி அடைந்து அவமானத்தைச் சந்தித்த நிலையில், பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் பாபர் அசாம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நாட்டின் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் பாபர் அசாம் தொடர்ந்து தடுமாறி வருகிறார். கடந்த 2019 டிசம்பருக்குப் பிறகு அவர் எந்தவொரு உள்நாட்டு முதல்தரப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பிரசிடெண்ட்ஸ் டிராபி தொடரில் ஓஜிடிசிஎல் அணிக்காக 'விருந்தினர் வீரராக' (Guest Player) பாபர் அசாமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் களமிறக்குகிறது.
இங்கிலாந்தில் இருந்து வரும் செப்டம்பர் 16 அன்று பாகிஸ்தான் திரும்பும் பாபர் அசாம், செப்டம்பர் 17 அன்று உள்ளூர் அணியுடன் இணைகிறார். பெஷாவரில் வரும் செப்டம்பர் 18 அன்று தொடங்கும் கிங்ஸ்மென் அகாடமிக்கு எதிரான போட்டியிலோ அல்லது செப்டம்பர் 24 அன்று நடைபெறும் கேஆர்எல் அணிக்கு எதிரான போட்டியிலோ அவர் களம் இறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் பேட்டிங் சராசரி முறையே 22, 20 மற்றும் 31 ஆகக் கடுமையாகச் சரிந்தது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடரிலும் 4 இன்னிங்ஸ்களில் 8, 6, 7 மற்றும் 76 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் பாபர் அசாம் மட்டுமின்றி ஷஹீன் ஷா அப்ரிடி, சல்மான் அலி ஆகா போன்ற பிற முன்னணி வீரர்களும் உள்நாட்டுப் போட்டிகளில் ஆட வைக்கப்பட்டுள்ளனர்.
'பாகிஸ்தான் கிங்' என்று அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட பாபர் அசாம், சர்வதேச அழுத்தங்களைத் தாண்டி தனது பழைய பேட்டிங் ஃபார்மை மீட்டெடுப்பதற்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் ஆட வைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இடையே ஏழு வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது போன்ற கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்கத் துவங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே பாபர் அசாம் 7 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஆட இருக்கிறார்.