📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 02, 2026 10:04 PM

பாம்பு கடிக்கு மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் உள்ளது

பாம்பு கடிக்கு மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் உள்ளது

பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று பாம்பு கடிக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர்.

அதன் விவரம் வருமாறு,

பண்ருட்டி மோகன்:- பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்க அரசு முன்வருமா?

அமைச்சர் அருண்ராஜ் :-பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் கே என் நேரு :-

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதி புள்ளம்பாடி ஒன்றியம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு கொண்டு வருகிறது. நிறைய கிராமங்களை கொண்ட பகுதி. அதை தரம் உயர்த்தி முழு நேர ஆரம்ப நிலை மருத்துவமனையாகமாற்றி தர வேண்டும். அப்படி தந்தால் அந்த பகுதியில் இருக்கிற பாம்பு கடிக்கான மருந்துகள் எல்லாம் 24 மணி நேரம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். கட்டிட வசதி இருக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. அதை தரம் உயர்த்தி தர வேண்டும்.

மருத்துவத்துறை சார்பில் நலம் செயலி உள்ளது. அதன் மூலம் மருந்துகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி:-

ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை அரசு மருத்துவமனையாக தரம் உயர்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதனை அரசும் திட்டத்தில் வைத்துள்ளது. எனவே அனைத்து நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும்.

முஸ்தபா (த வெ க ):- மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே அதற்கு தரமான வசதிகளை செய்து தர வேண்டும்.

அமைச்சர் அருண்ராஜ்:-

உறுப்பினரின் கோரிக்கையின் படி ஆய்வு செய்து அவர் கேட்ட வசதி செய்து தரப்படும்.

பெரியகுளம் சபரி ஐங்கரன்:-

தேனி அரசு மருத்துவமனையில் போதுமான பாம்புக்கடி சிகிச்சைக்காக வருவோருக்கு படுக்கை வசதி இல்லை அதனை செய்து தர வேண்டும்.

அமைச்சர் அருண்ராஜ் - கூடுதல் படுக்கை வசதிகள் நிச்சயம் செய்து கொடுக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்:-

பாம்பு கடிக்கு சமீபத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் இறந்துள்ளார். எனவே அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடிக்கான தடுப்பு மருந்து உள்ளதா? தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கு எத்தனை பேர் இறந்துள்ளனர்? எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் அருண் ராஜ் :-

இந்த ஆண்டு பாம்பு கடிக்கு 9,519பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 837 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டனர். அதில் 26 பேர் இறந்துள்ளனர். பாம்பு கடிக்கான விஷ முறிவு மருந்து அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கைவசம் உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

40 நிமிடம் மொத்த கேள்விகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.