பெண் கொலை வழக்கு: உடலை துண்டு துண்டாக டிராலியில் கொண்டு சென்ற கணவன் மனைவி கைது
செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி பெண்ணை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி டிராலியில் அடைத்து, டில்லி செல்லும் விரைவு ரயிலில் வைத்து தப்பிய கொடூர தம்பதியை, தனிப்படை போலீசார், மணிப்பூர் மற்றும் அசாமில் நேற்று கைது செய்தனர். தலையை சுக்கு நுாறாக உடைத்து, உடல் இருந்த அதே டிராலியில் வைத்ததாக, தம்பதி தெரிவித்த தகவல், போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் வசித்து வந்த ஹயாத்துன் நிஷா, 38, என்ற பெண் மாயமானார். இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இம்மாதம் 3ம் தேதி டில்லிக்கு சென்ற தமிழ்நாடு விரைவு ரயிலில், துர்நாற்றம் வீசிய டிராலியை, ஆக்ரா கேன்ட் ரயில் நிலைய போலீசார், 5ம் தேதி கைப்பற்றினர். இதில், பல துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இருந்தது; தலை இல்லை.
ஆக்ரா ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, 16 நாட்களாக, 350க்கும் மேற்பட்ட 'சி.சி.டி.வி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை தேடினர்.
அதில், கூடுவாஞ்சேரியில் இருந்து புறநகர் ரயில் வாயிலாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டிராலியுடன் வந்து, விரைவு ரயிலில் இளம்ஜோடி ஏறியது தெரிந்தது. தவிர, சடலமாக கண்டெடுக்கப்பட்டது,கூடுவாஞ்சேரியில் மாயமான ஹயாத்துன் நிஷா என்பது தெரிந்தது.
இதையடுத்து, ஹயாத்துன் நிஷா மாயமான வழக்கை விசாரித்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், அவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி, விசாரணையை தீவிரப்படுத்தினர். மூன்று தனிப்படைகளை அமைக்கப்பட்டன.
ஹயாத்துன் நிஷாவை கொலை செய்த இளம்ஜோடி, அசாம் மாநிலம், கசார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக் உத்தீன் லஸ்கர், 22 மற்றும் அவரது மனைவியான, ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பகாபதி மாஜி, 21, என்பதும் தெரியவந்தது.
கொலை செய்து தப்பிய இருவரும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க, அவரவர் மாநிலத்திற்கு தனித்தனியாக ரயிலில் சென்றனர். எனினும், துப்பு துலக்கிய போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கணவரை பிரிந்து, தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஹயாத்துன் நிஷாவுக்கும், அங்கு பணிபுரிந்து வந்த மாணிக் உத்தீன் லஸ்கருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்துள்ளனர்.
இந்த விவகாரம், மாணிக் உத்தீனின் மனைவி பகாபதி மாஜிக்கு தெரிந்ததால், அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மூவரும், கூடுவாஞ்சேரியில் ஒன்றாக வசித்தனர்.
ஹயாத்துன் நிஷா கர்ப்பமாகி உள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணிக் உத்தீன் லஸ்கரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.இதனால், ஹயாத்துன் நிஷாவை கொலை செய்ய மாணிக் உத்தீன் திட்டம் தீட்டியுள்ளார். அதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
அதன்படி, கடந்த 3ம் தேதி காலை நிஷாவை கொலை செய்து, அவரது கால், கை ஆகிய பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, பிரியாணி சமைக்கும் அண்டாவில், காய்கறிகளோடு வேக வைத்துள்ளனர்.
மற்ற பாகங்களை டிராலியில் அடைத்து, விரைவு ரயிலில் ஏற்றிவிட்டு, அசாம் மற்றும் ஒடிசாவுக்கு தப்பிச்சென்றனர்.
கொலையாளிகளை கைது செய்ய, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான ஒரு தனிப்படை அசாம் மாநிலத்திற்கும், மற்றொரு தனிப்படை ஒடிசாவிற்கும் புறப்பட்டது.
கொலையாளிகள், மொபைல் போன் எண்களை மாற்றி, வெவ்வேறு இடங்களில் தங்கி வந்தனர். எனினும் மொபைல் போனுக்கான தனித்துவ எண்ணான ஐ.எம்.இ.ஐ., வைத்து, அவர்களின் இருப்பிடம் கண்டறியப்பட்டது.
அதன்படி, மணிப்பூர் மாநிலம், காசிம்பூரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மாணிக் உத்தீன் லஸ்கரை, நேற்று காலை, போலீசார் கைது செய்தனர்.
அவரை, ஜிரிபாம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 'டிரான்சிட் வாரன்ட்' பெற்று, சென்னை கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவரது மனைவி பகாபதி மாஜியும், அசாமில் கைதானார்.
தலை எங்கே என கைதான தம்பதியிடம் விசாரித்தபோது, தலையையும் சுக்கு நுாறாக உடைத்து, அதே டிராலியில் வைத்து விட்டதாக கூறி, அதிர்ச்சி அளித்தனர். கொலையாளிகள் இருவரும், நாளை தமிழகம் அழைத்து வரப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.