பெருவெள்ள பாதிப்புக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா இழப்பீடு வழங்க நேபாள அரசு வலியுறுத்தல்
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என நேபாள அரசு வலியுறுத்தி உள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்பாறை உடைந்ததன் விளைவாக நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, பெரும் பேரழிவை ஏற்படுத்தியது.
உயிரிழப்பு 1,100-ஐ தாண்டியது
இதுவரை 1,100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 4,800 பேரின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், திடீர் திருப்பமாக நிதியுதவி கேட்பதற்கு பதிலாக நீதி மற்றும் இழப்பீடு கோர நேபாள அரசு முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தப் பெருவெள்ள பாதிப்புக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தார்மீக பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாடு வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் கூறும்போது, “ரசுவா பேரழிவை, நன்கொடைகள் தேவைப்படும் ஒரு மனிதாபிமான அவசரநிலையாக மட்டும் கருதக்கூடாது. இது முக்கிய தொழில்மயமான பொருளாதார நாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவால் நிகழ்ந்த பேரழிவாகும். இது நிதியுதவி சார்ந்த விஷயமல்ல.
இது சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பு சம்பந்தப்பட்ட விஷயம். தற்போது உலகில் அதிக அளவில் கரியமில வாயுவை உமிழ்ந்து வரும் மூன்று நாடுகளான இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை நேபாளத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளது” என்றார்.
ஐ.நா.வில் நேபாள பிரதமர்
நேபாள அரசு அவசர நிதியுதவிக்காக ஐ.நா. ஆதரவு பெற்ற ‘இழப்பு மற்றும் சேதங்களுக்குப் பதிலளிப்பதற்கான நிதியத்தை’ முறைப்படி அணுகியுள்ளது. மேலும், இந்தப் பேரிடரையும், பருவநிலை நீதிக்கான தனது கோரிக்கையையும் சர்வதேச மன்றங்களில் எழுப்ப அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அமெரிக்காவின் நியூயார்க்கில் செப்.8-ம் தேதி தொடங்கும் 81-வது ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா கலந்துகொண்டு, இந்தக் கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.