பிக் பாஸ் ஆனந்தியின் தந்தை மறைவு.. இதுலகூடவா கன்டென்ட் தேடுவீங்க? நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
சென்னை: பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசனில் போட்டியாளராக நடிகை ஆனந்தியின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்தத் துயர செய்தியை ஆனந்தியிடம் உடனடியாக தெரிவிக்காமல், அவரை வழக்கமான 'எவிக்ஷன்' நடைமுறையிலேயே வீட்டை விட்டு வெளியனுப்பிய செய்தி சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைக்கப்பட்ட செய்தி?: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்ஷன் நடைமுறையில், குறைந்த வாக்குகளை பெற்றதன் அடிப்படையில் ஆனந்தி வெளியேற்றப்பட உள்ளார் என்பது ஏற்கனவே மக்களுக்கு தெரிந்தது தான். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை தான் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஆனால், இந்த வாரம் சனிக்கிழமையே ஆனந்தியை விஜய் சேதுபதி எவிக்ட் ஆன தகவலை தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையை தாங்க முடியாமல் ஆனந்தி தவித்தபோது, விஜய் சேதுபதி வீட்டிற்குள் இருக்கும் அனைவரிடமும் சொல்லிவிட்டு வாங்க என்றார்.
வீட்டிற்குள் சண்டை: ஆனால், அந்த நேரத்திலேயே ஆனந்தியின் தந்தை உயிரிழந்த செய்தி படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும், அந்த தகவலை ஆனந்தியிடம் பிக் பாஸ் குழுவினர் தெரிவிக்கவில்லை. தந்தை இறந்தது அறியாமல் வீட்டிற்குள் ஆனந்தி, சக போட்டியாளரான அஸ்விதாவிடம், நான் வெளியில் போவதற்கு நீ தான் காரணம் என்று சண்டையிட்டார். வீட்டிற்குள் இருந்த மற்ற போட்டியாளர்களுக்கும் இந்த துயரச் செய்தி தெரியாததால், அவர்களும் ஆனந்தியை மேலும் காயப்படுத்தும் வகையில் பேசினர்.
இதுல கூடவா கன்டென்ட்: குடும்பத்தில் இவ்வளவு பெரிய துக்கச் சம்பவம் நடந்திருக்கும் போது, அந்த தகவலை தெரிவிக்காமல், வீட்டிற்குள் நடந்த சண்டையையும் எபிசோடில் 'கன்டென்ட்'டாகக் காட்டியது பிக் பாஸ் பார்வையாளர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு போட்டியாளரின் குடும்பத் துயரத்தை கூடவா கண்டென்ட்டாக மாற்றுவீர்கள்? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தந்தை சுப்பையா: ஆனந்தியின் தந்தை சுப்பையா, உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பிறகும் விளையாட்டு போட்டிகளில் நடுவராக (Referee) இயங்கி வந்தார். ஆனந்தி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதால், அவரது குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக தாய் ரேணுகா சென்னை வந்திருந்தார். தந்தை சுப்பையா மட்டும் கோவையில் தனியாக இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தன்னை மிகுந்த ஆசையுடனும் எதிர்பார்ப்புடனும் பிக் பாஸுக்கு அனுப்பி வைத்த தற்போது அவர் உயிரிழந்த நிலையில், அந்த துக்க செய்தியைக்கூட ஆனந்தியிடம் தெரிவிக்காமல், அவரது சூழ்நிலையையே நிகழ்ச்சிக்கான கண்டெண்டாக பயன்படுத்தியிருப்பதாக இணையவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.