📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 13, 2026 08:37 PM

பிரிக்ஸ்: சீனா, ரஷ்யா, இந்தியாவின் ஒத்துழைப்பு

பிரிக்ஸ்: சீனா, ரஷ்யா, இந்தியாவின் ஒத்துழைப்பு

பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒருங்கிணைந்த அனைத்துலக வளர்ச்சி குறித்து பிரிக்ஸ் மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) கலந்துரையாடியுள்ளனர்.

சீனா, ர‌ஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் கலந்துகொண்டன.

அதில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமைப்பிற்குள் ஒத்துழைப்பு வலுப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிரிக்ஸ் அமைப்பு உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டையும் அனைத்துலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காட்டையும் அனைத்துலக வர்த்தகத்தில் 25 விழுக்காட்டையும் பிரதிநிதிப்பதாகக் கூறினார்.

“பிரிக்ஸ் அமைப்பின் ஆற்றல் நமது பன்முகத்தன்மையிலும் ஒத்துழைப்பிலும் இருக்கிறது,” என்று சீன அதிபர் ஸி ஜின்பிங், ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட தலைவர்களிடம் வலியுறுத்தினார்.

ஒருங்கிணைந்த அனைத்துலக வளர்ச்சிக்காக முயற்சி செய்துள்ளதைச் சுட்டிய திரு மோடி, வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டிருந்தாலும் ஒத்துழைப்பின்மூலம் அனைத்துத் தரப்புகளும் எழ முடியும் என்றார்.

ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், புதிய, இன்னும் நியாயமான உலக ஒழுங்குக் கட்டமைப்பை உருவாக்கப் பிரிக்ஸ் அமைப்பு செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங், “விதிமுறைகள் இல்லாத உலகம் சமிக்ஞை விளக்குகள் இல்லாத சாலைச் சந்திப்புகள்போல இருக்கும். அந்த வேளையில் அமளியையும் ஒழுங்கின்மையையும் தவிர்க்க முடியாது,” என்றார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சனிக்கிழமை (செப்டம்பர் 12) மாநாட்டின் முதல் நாளில் மத்திய கிழக்கு விவகாரம் குறித்து அதிகம் பேசப்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தொடர்பில் பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் ஒருங்கிணைந்த அறிக்கையைக் கடந்த மே மாதம் வெளியிட மறுத்துவிட்டனர்.

தற்போது ஈரானிய அதிபர் மசூத் பெசெக்‌ஷியான் உள்பட பிரிக்ஸ் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலைக்கு வருந்துவதாகக் குறிப்பிட்ட தலைவர்கள், பிரிக்ஸ் நாடுகள் கூடுமானவரை அனைத்துத் தரப்பும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தினர்.